Temple info -2982. Vazhudur Agneeswarar Temple
தச வீரட்டானம் 02 : வழுதூர் அக்னீஸ்வரர் .
தச வீரட்டான ஆலயங்கள் வரிசையில் இரண்டவாதாக வரும் ஆலயம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் இருக்கும் வழுதூர் அக்னீஸ்வரர் ஆலயம்.
இது மகா பழமையான ஆலயம். அக்னிபகவனால் ஸ்தாபிக்கப்பட்டு சித்தர்களால் உருவான ஆலயம் இது.
இந்த ஆலயத்தின் வரலாறு முருகப்பெருமான் காலத்துக்கும் முந்தையது, அவ்வளவு பழமையானது. அதாவது தட்சன் செய்த யாகத்தின் காட்சியில் இருந்து இது தொடங்குகின்றது.
தட்சன் அந்த யாகத்தில் சிவனை அழைக்காமல் அவமானப்படுத்தினான், சிவபெருமான் செல்லாத யாகத்துக்கு அவரை மீறி தேவர்களெல்லாம் சென்றார்கள். பின் தட்சன் அந்த யாகத்தால் அழிக்கப்பட்ட போது சிவனின் சக்தி அறிந்து தங்கள் தவறுக்கு மன்னிப்புக் கோரி சிவனை நோக்கி தவமிருந்தார்கள்.
அப்படி ஒவ்வொரு தேவரும் தவமிருந்து சிவனிடம் மன்னிப்புக் கேட்டு சாபம் போக்கிய தலங்கள்
அவரவர் பெயரில் அழைக்கப்படுகிறது.
பிரம்மன் தவமிருந்த இடம் பிரம்மபுரீஸ்வர் தலம், சந்திரன் வழிபட்ட இடம் சந்திரசேகர தலம், சூரியன் வழிபட்ட இடம் சூரியஸ்தலம், அக்னி வழிபட்டு அதற்கு சிவன் அருள் செய்த இடம் அக்னீஸ்வரர் தலம்.
ஆம். இது அக்னிபகவான் வழிபட்ட இடம், அவர் சிவனை வழிபட்டு தட்சனின் யாகத்தின் போது செய்த சிவநிந்தனைக்கு மன்னிப்புக் கேட்டு அருள் பெற்ற தலம்.
இது அகத்தியர் முதலான சித்தர்களால் உருவான ஆலயம், அதனால் மருத்துவ அதிசயங்கள் நிறைந்த தலம்.
திருவழுதியூர் அக்னீஸ்வரர் என கொண்டாடப்பட்ட தலம் இது. வழுதி எனும் சொல்லுக்கு ஞானம் அல்லது முழுமை எனப் பொருள். பின்னாளில் வழுதியூர் என மாறி அதன்பின் வழுதூர் என மருவிற்று.
இந்த ஆலயம் பாண்டிய மன்னர்களால் கொண்டாடப்பட்டது. பழைய நெடுஞ்செழியனில் இருந்து ஜடாவர்ம சுந்தரபாண்டியன் காலம் வரை அவனுக்கு பின் தென்காசி பாண்டியர் வரை இதனை கொண்டாடியிருக்கின்றார்கள்.
அதுபற்றிய கல்வெட்டுகள் இன்றும் உண்டு. ஏராளம் உண்டு. அவை இப்போதுதான் ஆய்வு செய்யப்படுகின்றன.
இன்று வழுதூர் சிறிய ஊராக சுருங்கிவிட்டதாலும், இந்த ஆலயத்தின் பெருமை வெளியில் தெரியவில்லை என்பதாலும் அதனைப் பற்றி அதிகம் பேருக்கு தெரியாது எனினும் இன்றுவரை சித்த மருத்துவத்தின் அதிசயம் அந்தத் தலமே.
இந்தத் தலம் சித்தர்களின் தனி அருள் கொண்டது, அந்த லிங்கம் அக்னிபகவனால் ஸ்தாபிக்கப்பட்டு சித்தர்களால் சக்தி கொடுக்கப்பட்டது.
இன்றுவரை சித்தர்கள் அங்கு வழிபாடு செய்வது உண்டு. அரூபமாகவோ இல்லை, பறவையாகவோ, சர்ப்பமாகவோ அவர்கள் வந்து செல்வது சாதாரண காட்சி.
அதனால் அந்த ஆலயம் நோய் தீர்க்கும் ஆலயம், எல்லா நோய்களும் அங்கு தீர்கின்றன.
மனம் சம்பந்தமான பிரச்சினைகள், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களெல்லாம் அங்கு தீர்கின்றன. 48 நாட்கள் தொடர்ந்து பூஜித்து அந்த ஆலய தீர்த்தம் பருகினால் எல்லா நோயும் தீரும் என்பதற்கு சாட்சிகள் ஏராளம்.
மேற்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயம் மிக மிக சூட்சுமமான முறையில் பல சங்கிலிகளைக் கொண்டது, பெரும் ரகசிய சூட்சுமங்களைக் கொண்டு மகா ஞான சித்தர்களால் அமைக்கப்பட்ட ஆலயம் இது.
இது மேற்கு பார்க்க அமைந்த ஆலயம், கர்மங்களை களையும் ஆலயம்.
இந்த ஆலயம் மகேச தலம் எனக் குறிக்கப்பட்டுள்ளது, 1008 லிங்கங்களில் மகேச லிங்கமும் ஒன்று.
மகேசம் என்பது சிவனின் ஐந்தொழில்களை குறிக்கும் ஒன்று. இது 25 வடிவமாக பிரியும். எல்லா ஆலய கருவறையின் பின்னால் இருக்கும் லிங்கோத்பவர் இந்த வடிவங்களில் ஒன்றே.
அந்த மகேசம் அல்லது மகாசதாசிவம் எனும் பெரும் தத்துவத்தின் ஐந்தொழில்களில் ஒன்று மறைத்தல், சிவனின் ஐந்து முகங்களின் ஒரு முகத்தின் தொழில் இது.
இந்த முகம் மேற்கு நோக்கி அமைந்திருக்கும் என்பது புராணம்.
ஆம். ஒருவன் பெற்றிருக்கும் கர்மாவினை மறைத்தல், அதை இல்லாமல் செய்தல் என்பது இந்த தலத்தின் தாத்பரியம்.
அதாவது, நம் கர்மா என்ன என்பதோ, யாருடன் தொடர்புடையது என்பதோ, அதன் பலன் என்ன என்பதோ, நமக்குத் தெரியாது. முன் ஜென்ம தொடர்ச்சியால் வரும் இந்தப் பிறவியில் ஏற்படும் துன்பம் எதனால் என்பதும் தெரியாது.
அந்தக் கர்மத்தால் வரும் நோய், இதர லௌகீக வடிவத் துன்பங்கள் மனதாலும் உடலாலும் வரும் துன்பங்களின் வலி மட்டுமே நமக்குத் தெரியும், அதாவது கர்மத்தின் பலன் தெரியும்.
இந்த ஆலயத்து சிவன் அந்த கர்மத்தின் கொடிய பலனை மறைத்து அருள் தருகின்றார். எல்லாக் கொடிய வினைகளும் மறைய வைக்கின்றார்.
முன் ஜென்மத்தில் செய்த எல்லாக் கர்ம வினைகளும் மேற்கு நோக்கிய இந்தத் தலத்தில் சிவனின் மறைத்தல் தொழிலில் மறைந்தே போகின்றன.
இதனாலே இந்த ஆலயம் நோய்களை குணமாக்கும் அற்புத ஆலயமாக, மனநோய் உடல் நோய் பெரும் பிணி நோய் என எல்லாம் களையும் ஆலயமாக அருள்வீசிக் கொண்டிருக்கின்றது.
தசவாயுவில் இந்த ஆலயம் அபானன் வாயுவினை குறிப்பது. அபானன் எனும் வாய்வுதான் உடலின் கழிவுகளை வெளியேற்றும் முக்கிய வேலையினைச் செய்கின்றது, வேண்டாதன எல்லாம் கழியப்பெற்றால் ஒரு உடலில் நோய் இராது.
இந்த ஆலயம் அந்த வகையில் உடலின் கழிவுகளை, நச்சுக்களை எல்லாம் வெளியேற்றும் அருளை வழங்கும். ஒரு உடலுக்கும் மனதுக்கும் நோய் வரக் காரணமே வேண்டாதவற்றை வெளியேற்றாமல் உள்ளே வைத்திருப்பது.
இந்த ஆலயம் அதை மாற்றும். உடல் ரீதியாக அபானன் வாயு நல்லபடியாக செயலாற்றும், அது பலமாகும், சக்தி மிக்கதாகும், அதனால் உடல் நலமடையும்.
சிவனின் அருளில், சித்தர்களின் அருளில் இந்த ஆலயம் கர்மப் பலனை மறைப்பதால் மனோபலம் அதிகரிக்கும்.
தசநாடியில் இந்த ஆலயம் பிங்கலை எனும் சூரிய கலைக்கு அதாவது வடபக்க நாசிக்கும் நாடிக்கும் வலுசேர்க்க கூடியது.
அக்னி என்றால் வெப்பம், வலதுபக்க மூச்சு வெப்பமிக்கது. இந்த ஆலயத்தில் வழிபட்டால் வலபக்க மூச்சு சீராகும். அந்த நாடி துலங்கும்.
கர்மேந்திரியங்களில் இந்த ஆலயம் வாய். அதாவது, நாக்கு சம்பந்தப்பட்டது.
நாக்குதான் கர்மாவினை சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பது. வாயால் சொல்லப்படும் வார்த்தைகள்தான் கர்மாவின் பலனைச் சேர்க்கின்றன. இது வழமையான ஒன்று.
தட்சனின் யாகத்தில் நாவின் மந்திரங்களாலே யாகம் நடந்தது. அக்னி பகவானின் நாக்கு அதை வாங்கிக் கொண்டது.
அக்னியும் நாவின் தத்துவம் கொண்டது. அது ஏற்பதும் கொடுப்பதும் அதன் அக்னி நாவுகளாலே.
அந்த அக்னிக்கு கர்மம் தீர்த்த ஆலயம் எனும் வகையில் நாவினால் வந்த கர்மா, வார்த்தை பிரயோகங்களினாலும், இதர நாவின் சுவைகளாலும், இன்ப மயக்கங்களாலும் வந்த எல்லாக் கர்மமும் தீரும்.
இந்தத் தலம் வாயின் வார்த்தைகளுக்கான தலம். இங்கு வழிபட்டால் வார்த்தையின் பலம் அதிகரிக்கும். நல்ல செல்வாக்கான வார்த்தைகள் வரம்போல் கொட்டும்.
இது தசவீரட்டான ஆலயங்களில் அக்னி பகவானின் அருள் அனைத்தும் தரும்.
அக்னி பரிசுத்தமானது. தீமைகளை எரித்துவிடும் சக்தி படைத்தது. இந்த பிரபஞ்சத்தின் சக்தி மூலம் அதுதான். அக்னிதான் ஒரு உடலை இயங்க வைப்பது, ஆரோக்கியமான உடலை இயக்குவதும் அதன் ஆரோக்கியத்தை அளவிடுவதும் வெப்ப சக்தியே.
அவ்வகையில் அக்னி இன்றி மானுட உடல் இயக்கமில்லை. அதுவன்றி கர்மம் தீர்வதில்லை.
யோகத்திலும் மூல அக்னி மூலாதாரத்தில் இருந்து எழுந்து வராமல் குண்டலினி சக்தி இல்லை.
எல்லா வகையிலும் பெரும் ஆதாரம் அக்னி, அந்த அக்னியின் அருளை சிவனருளோடு சேர்த்துத் தரும் ஆலயம் இது.
குற்றாலம் தென்காசி செல்லும் போது மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரதான இடங்களுக்கு செல்லும் போது, அவ்வழியில் செல்லும் போது இந்த ஆலயத்தை காணத் தவறாதீர்கள்.
அக்னி பகவானே வந்து வணங்கி நலம்பெற்ற தலத்தில் வணங்கினால் உங்களுக்கு அக்னி சம்பந்தமான எல்லாப் பிரச்சினையும் தீரும்.
ஒரு உடலில் நோய் தோன்ற முதல் காரணம் வெப்பநிலை மாறுபாடு. அந்த உஷ்ண கோளாறுதான் எல்லா நோய்க்கும் அடிப்படை. நோய் உருவாகும் மூலமே இங்கு களையப்படுகின்றது.
அபானன் வாயு இங்கு சீராகும். சூரியகலை எனும் பிங்கலை வெப்பநாடி சீராகும்.
முக்கியமாக கர்மப்படி சுமக்கும் பாரங்களை அந்த வலிகளை எல்லாம் மேற்கு நோக்கிய மகேச மூர்த்தி மறைத்துவிடுகின்றார். கர்மம் மறையுமிடம், வாழ்வு சிறக்குமிடம், எல்லா இன்னலும் பறந்தோடும்.
அக்னிபகவான் சரியான இடத்தில் பிரபஞ்சம் தன் சக்தியினைக் கொட்டும் இடத்தினை தேர்வு செய்து கொடுத்த இடம் இது. அந்த மகேச லிங்கமும் அற்புதமான சக்திகளை ஈர்த்துத் தரும் தலம் இது.
நம்பிக்கையுடன் வணங்கினால் அந்த ஆலய தீர்த்தமே 48 நாள் விரத வழிபாட்டில் மனநோய் முதல் புற்றுநோய்வரை தீர்க்கும் சக்தி கொண்டது.
வார்த்தைகளால் வந்த வினை காத்து இனி வராத அளவு நல்ல காவலை அந்தத் தலம் தரும்.
இப்படியான ஆலயத்திற்குச் சென்று நலன் பெற்று வரவேண்டியது ஒவ்வொருவரின் புண்ணிய பலன்.
ஏகப்பட்ட கல்வெட்டுக்களைக் கொண்ட இந்த ஆலயம், பாண்டியர் காலத்தில் கொண்டாடப்பட்டு பின் காலத்தால் பின்னடைந்தது. அந்த கல்வெட்டுக்களை படிக்கும் பணி இப்போது நடக்கின்றது. விரைவில் பெரும் அதிசய செய்திகள் வரலாம்.
தசவீரட்டான தலமான இந்தத் தலத்தின் கும்பாபிஷேகம் வரும் பிப்ரவரி 10, 2025 அன்று அதாவது தை மாதம் 28ம் தேதி நடக்க இருக்கின்றது.
அந்த ஆலயத்தின் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள விரும்புகின்றவர்கள் மிக மகிழ்வோடு கலந்து கொள்ளலாம். உங்கள் கர்ம வினை எல்லாம் கரைந்து உங்கள் உடலும் புதிதாகி, உங்கள் வார்த்தைக்கு தனி செல்வாக்கும் ஏற்பட்டு பெருவாழ்வு வாழ்வீர்கள், அந்தத் தலம் அதைச் செய்யும். இது சத்தியம்.
நன்றி பிரம்ம ரிஷியார்
Comments
Post a Comment