Temple info -2981. Kailasa Nathar Temple, Singikulam, Thirunelveli கைலாசநாதர் கோயில்,சிங்கிகுளம் ,திருநெல்வேலி

 


தச வீரட்டானம் 04 : சிங்கிகுளம் கைலாசநாதர் ஆலயம்.


நெல்லை மாவட்டம், களக்காடு அருகே அமைந்துள்ள்ளது இந்த சிங்கிகுளம் கைலாசநாதர் ஆலயம். பச்சையாற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம்  தச வீரட்டன தலங்களில் இது நான்காவது ஆலயம்.


சிங்கிகுளம் என்பது மிக மிக தொன்மையான வரலாற்றை கொண்ட ஊர். மிக மிக பழமையான வரலாறு அதற்கு உண்டு.


எவ்வளவு பழமையானது என்றால் தீராக் குறை இருந்த பெரும் சக்திகளெல்லாம் தவம் இருந்த ஆலயம் இது. மகேந்திரகிரி மலையில் வசித்த இரண்யவான் எனும் முனிவரால் உருவான பஞ்ச லிங்க ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.


இரண்யவானின் மகள் ஆருத்ரா என்பவளைச் சிவன் தன்னோடு ஏற்று பச்சையாறாக ஓட வைத்தார். அந்தப் பச்சையாற்றின் கரையில் உருவான பஞ்சலிங்க தலங்களில் இந்த கைலாச நாதர் ஆலயமும் ஒன்று.


மேற்கு நோக்கி அமைந்த இந்த ஆலயத்தில் தசரதன் பிள்ளை வரம் வேண்டி வழிபட்டிருக்கின்றான். தன் கர்மவினையின் கொடுமை முடிந்து நல்ல புத்திர பாக்கியத்துக்காக அவன் வழிபட்டிருக்கின்றான்.


இராமபிரான் இங்கு வழிபட்டிருக்கின்றார், இலங்கைக்கு செல்லுமுன் இங்கு வழிபட்டு தன் கர்மத்தினைச் சுமக்கும் பலத்தினைப் பெற்றிருக்கின்றார்.


அப்படியே காமதேனு இந்த ஆலயத்துக்கு வந்து வழிபட்டு தன் சாபம் தீர்ந்து நற்கதி அடைந்திருக்கின்றது.


இவை எல்லாம் திருக்குற்றால வரலாறு எனும் நூலின் கண்டசேகர சருக்கம் எனும் பிரிவில் சொல்லப்படும் புராணத் தகவல்கள்.


அவ்வளவு சிறப்பானது இந்த ஆலயம். பச்சையாறு வடக்கு நோக்கி ஓடி தாமிரபரணியில் கலப்பதால், அது உத்திர கங்கா என ஓடுவதால் இது மிகச் சிறப்பான இடத்தைக் கொண்டிருக்கின்றது.


இரண்யவான் முனிவரால் எழுப்பப்பட்ட இந்த லிங்கம், 1008 லிங்கத்தில் ஞானலிங்கம் எனும் லிங்கமாக அமைந்துள்ளது, அதன் பொருள் இந்த லிங்கம் முழு ஞானத்தை வழங்கும்.


இந்தத் தலத்தின் அன்னை பெயர் ஆவுடையம்மாள்.


இந்த ஞானலிங்கமே கைலாசநாதர் என்றானது. ஞானமே முக்திக்கு அடிப்படை, கைலாசத்திற்கு அழைத்துச் செல்வதும் அந்த ஞானமே.


அந்த ஞானத்தை முழுக்க முழுக்க வழங்கும் ஆலயம் இது. ஞானம் என்பது கர்மம் முடியுமிடம் கிடைப்பது. மேற்கு நோக்கிய இந்த ஆலயம் கர்மம் தீர்த்து ஞானம் அருளும் ஆலயம்.


பஞ்சலிங்க தலம் என்பது சிவனின் ஐந்தொழில்களைக் குறிப்பது. அப்படியே நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தின் எழுத்துக்களை கொண்டது.


அவ்வகையில் இந்த ஆலயம் படைப்பு தொழிலை கொண்டது.


நாடிகளில் இந்த ஆலயம் சிங்குவை நாடியினைக் கொண்டது


அதாவது இந்த ஆலயம் சுவாதிஸ்டானத்தை வலுப்படுத்தும். "நமசிவாய" எனும் எழுத்தில் இந்த ஆலயம் 'ம' எனும் எழுத்துக்கு ஆதாரமானதும், நீர் தத்துவம் கொண்டது.


இந்தச் சுவாதிஷ்டானம் என்பது அடிவயிற்றில் அமைந்துள்ளது. இது நீர் தத்துவம் கொண்ட சக்கரம் அப்படியே உடலின் நீர் சக்திகள் அதாவது சிறுநீரகம், சுக்கிலம் என நீர் சக்திகள் கொண்ட இடத்தில் இது அமைந்து கட்டுப்படுத்துகின்றது.


இந்தச் சக்கரம் சரியாக இருந்தால் நீர் சம்பந்தமான நோய்கள் உடலில் வராது. இந்தச் சக்கரம் சரியாக துலங்கவில்லை என்றால் சிறுநீரக சிக்கல் முதல் எல்லாச் சிக்கலும் உருவாகும்.


குழந்தையின்மை, பெண்களுக்கு மாதாந்திர சிக்கல் எனப் பல விஷயங்களின் காரணம் இந்த சக்கரத்தின் தன்மைதான்.


இரத்த சோகை, மலச்சிக்கல், இடுப்புப் பிரச்சினைகள், மூட்டுப் பிரச்சினைகள், மண்ணீரல் கோளாறுகள்

பித்தப்பை பிரச்சினைகள் எல்லாம் இங்கிருந்தான் உருவாகும்.


இந்தச சக்கரம் சரியாக இருந்தால் உடலின் நீர் சம்பந்தமான இயக்கமெல்லாம் மிகச் சரியாக நடக்கும். அட்ரீனல் சுரப்பி இங்கேதான் உண்டு.


இது சரியில்லை என்றால் மனோரீதியாகவும் சிக்கல் வரும். இந்தச் சக்கரத்தின் வீச்சு அப்படியானது.

இச்சக்கரமே சுயத்தை அறியவைக்கும்.  இச்சக்கரம் ஆழ்மனதோடு தொடர்பு உடையது. பிறருடன் ஒருவர் வைத்திருக்கும் சமூக உறவு, வாழ்க்கையை அனுபவித்து வாழ்தல், தன் பலம் மற்றும் பலவீனங்களை அறிதல் ஆகிய பண்புகள் சுவாதிஷ்டான சக்கரத்தின் செயல்பாடுகளைச் சார்ந்தே இருக்கின்றன. 


எப்படிப்பட்ட  எதிர்வினை ஆற்ற வேண்டும் என்பது சுவாதிஷ்டானத்தின் கட்டுப்பாட்டில்ததான் இருக்கிறது. உணர்ச்சி, சிற்றின்பம், மகிழ்ச்சி, நெருக்கம், உள்ளுணர்ந்து  அறிதல் ஆகியவையெல்லாம் இதனால் வருவதே.


பயம், அச்ச உணர்வு, தன்னபிக்கையின்மை, பொறாமை, மூர்க்கத்தனம், கவனமின்மை, மன அழுத்தம், சமூக உறவின்மை, மிகுந்த உணர்ச்சிவசம் இதெல்லாம் இந்தச் சக்கரத்தின் குறைந்த செயல்பாட்டால் வருபவை.


இங்கேதான் இன்னொரு விஷயத்தையும் கவனிக்கவேண்டும். உணர்வுகள் என்பது இங்கிருந்துதான் உருவாகின்றது, உணர்வுகளின் மையம் இதுதான்.


காமம் முதல் பல உணர்வுகள் இன்னும் பல்வேறு வகையான சுகங்கள் இங்கிருந்துதான் உருவாகும். அது பசியாக இருக்கலாம், காமமாக இருக்கலாம், இன்னும் பலவான சுகங்களாக இருக்கலாம்.


சுகத்தைத் தேடி செல்லும் வாழ்வு மானுடனுடையது. அதற்கு நிம்மதி, முழுமை எனப் பல பெயர்களைச் சொன்னாலும் அடிப்படையில் அவன் விரும்புவது ஒரு திருப்தி.


இந்தச் சக்கரம் சரியாக இருந்தால் மனதுக்கும் உடலுக்குமான ஒரு முழு திருப்தி கிடைக்கும். நிறைவு கிடைக்கும்.


மானுடரின் குழப்பமான சிந்தனைப்படி சக்தியினை இந்த சக்கரத்தில் இருந்து கீழே இறக்கினால் அது மனித நிலையில் இருந்து மிருக நிலைக்கு அழைத்துச் செல்லும்.


இந்தச் சக்கரத்துக்கு கீழ்தான் சுகங்களுக்கான இந்திரியங்கள் உண்டு. அந்தச் சுகங்களை நோக்கி சக்தியினைக் கீழே இறக்கினால் அவன் போகி.


இதுதான் இன்ப போகம். இந்தச் சக்கரத்தில் இருந்து சுக்கிலம் முதல் எல்லாவற்றையும் கீழே இறக்க இறக்க அவன் போகத்தில் வீழ்ந்து அதற்கு அடிமையாகி விலங்குபோல் வாழ்ந்து மடிவான்.


இந்தச் சக்தியினை அந்த இடத்தில் இருந்து மேலே ஏற்றிச் சென்றால் அவன் யோகி, அவன் ஞானத்தால் இறை நிலை அடைவான்.


ஒருவன் போகி என உணர்ச்சிக்கு அடிமையாகி அங்கே வீழ்ந்து கிடப்பதும், அவன் யோகியாகி ஞானம் அடைவதும் தெளிவு அடைவதும் இந்தச் சக்கர சக்தியினைப் பொறுத்தே.


ஆம். இந்தச் சக்கரத்தின் உணர்ச்சிதான் ஒருவனை நடத்தும், அந்த உணர்ச்சி கர்ம வினைப்படி வரும்.


இந்த உணர்வுகளை சரியாகக் கையாள்வதே ஞானம். இந்த ஆலயம் அந்த ஞானத்தை வழங்கும்.


தசவாயுக்களில் இந்த ஆலயம் அபானன் வாயுவுக்கானது. அந்த  வாயு சுவாதிஷ்டானத்தை இயக்குவது. இந்த அபானன் வாயுவும் சந்ததி பெருக்க துணைபுரியும் தன்மை கொண்டது.


ஆம். இந்த ஆலயம் நல்ல புத்திர பாக்கியத்தை தரும். தசரதனுக்கு அப்படி அது நான்கு மக்களை கொடுத்தது. இராமனுக்கும் இரு மகன்களைக் கொடுத்தது.


காமதேனுவுக்கும் வாரிசு வரத்தை கொடுத்தது.


இந்த ஆலயம் மிக மிக சூட்சுமமான தத்துவங்களையும் கொண்டது. இங்கு மேற்கு நோக்கி ஞானலிங்கமாக கைலாச நாதரும் ஆவுடையநாயகியாக தேவியும் அருள் பாலிக்கும் ஆலயத்தில் நவக்கிரகங்கள் தனி தனி சந்நிதியாக உண்டு


ஒவ்வொரு கிரகமும் தனி தனி சந்நிதியில் அவைகளுக்குரிய திசை நோக்கி நின்று அருள் வழங்குகின்றன‌.


இந்த ஆலயத்தில் பாண்டியர் கால மீன் சின்னம் சிற்பமாகப் பொறிக்கபட்டுள்ளது. அந்த முத்திரையினை கைகளால் தடவிக் கொடுத்தால் நரம்பு சம்பந்தமான எல்லாச் சிக்கலும் தீர்கின்றது.


தினமும் சூரியன் மறையும் போது அதன் கதிர்கள் மாலையில் ஞானலிங்கத்தில் விழுகின்றன, அந்நேரம் செய்யப்படும் பூஜைக்கு சக்தி அதிகம்.


இடையில் காலத்தால் பழுதுபட்ட ஆலயம் இப்போது மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றது. முறையான வழிபாடுகள் தொடங்கப்பட்டபின் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கின்றது.


இந்த ஆலயம் நல்ல ஞானத்தைத் தரும். சந்ததி பாக்கியம் தரும். இன்னும் வயிற்று பகுதியின் எல்லா சிக்கல்களையும் தீர்க்கும். எவ்வித நோய்களாய் இருந்தாலும் சிவனருளில் சரியாகும்.


சிங்கி எனும் சொல்லுக்கு சிவபுண்ணியம் எனும் பொருளும் உண்டு. இந்த ஊரின் பெயரே சிவபுண்ணியத்தில் தொடங்கப்பட்டது.


ஆவுடையம்மாள் என நெல்லை மாவட்டம் பக்கம் வரும் பெயர்களெல்லாம் இந்த ஆவுடை நாயகியின் பெயராகச் சூட்டபட்டதே. அந்தப் பெயர்தான் ஆவுடையக்கா என செங்கோட்டையில் ஒரு பெண்சித்தரை பின்னாளில் கொடுத்தது.


தெற்கே செல்லும் போது இந்த ஆலயத்தை தரிசிக்க மறவாதீர்கள். இதனோடு சேர்ந்த இன்னும் நான்கு பஞ்ச லிங்க‌ தலங்கள் உண்டு.


களக்காடு  சத்யவாகீசர்  கோவில், பத்தமடை  குலசேகரநாதர் ஆலயம்,  பதுமனேரி  நெல்லையப்பர்  கோவில், தேவநல்லூர்  சோமநாதர் ஆலயம் என்பவை இதர நான்கு.


வாய்ப்பு கிடைத்தால் இந்த நான்கு ஆலயங்களையும் தரிசித்தால் பஞ்சலிங்க தலம் சந்தித்த பாக்கியமும் கிட்டும்.


இந்த ஆலயம் இரண்யவான் எனும் முனியால் அடையாளம் காட்டப்பட்டு சிவனே வந்து குடியேறிய ஆலயம். துர்வாசர் முதல் பலர் வந்து பணிந்த ஆலயம்.


தசரதனும் இராமபிரானும் வழிபட்டு பலனடைந்த ஆலயம். காம்தேனுவின் சாபம் தீர்ந்த ஆலயம்.


இந்த ஆலயம் உங்கள் கர்மம் தீர்த்து வைக்கவும், அதனால் ஞானம் கொடுக்கவும் தயாராக இருக்கின்றது. சுவாஷ்டிதானத்தை சரி செய்து சக்திமிக்கதாக்கும் இந்த ஆலயம் எல்லாக் குறைகளையும் நிவிர்த்தி செய்து வாழ்வை வளமாக்க தயாராக இருக்கின்றது.


அங்குச் சென்று பச்சையாற்றில் நீராடி இந்த கைலாசநாதரையும் ஆவுடைநாயகியினையும் தரிசித்து வணங்கினால் எல்லாப் பலனும் கிட்டும். மாலை வேளையில் சூரியன் சாயும் போது கைலாசநாதரை வணங்கினால் இன்னும் பலன்கள் விசேஷம்.


அதை அனைவரும் பெற்றுக்கொள்ளட்டும். சிவனின் எல்லா நலமும் அருளும் பலமும் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

Comments

Popular posts from this blog

Temple info -1830. Perunna Subramanya Swamy Temple, Kottayam. பெருந்நா சுப்ரமண்ய ஸ்வாமி கோயில், கோட்டயம்

Temple info -2619 Udayanapuram Subramanya Swamy Temple,Vaikom,Ernakulam. உதயானபுரம் சுப்ரமண்யஸ்வாமி கோயில்,வைக்கோம்,எர்ணாகுளம்

Birla Mandir Hyderabad பிர்லா மந்திர்,ஹைதராபாத்