Temple info -2980 Agneeswarar Temple, Melnatham
தச வீரட்டானம் 05 : மேலநத்தம் அக்னீஸ்வரர் ஆலயம்.
தச வீரட்டானத் தலங்களில் ஐந்தாம் ஆலயமான இந்த ஆலயம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அங்கு சிவன் அக்னீஸ்வரராக அருள்பாலிக்கின்றார், அன்னை கோமதி தேவி.
இந்த ஆலயத்தின் தோற்றம் மிகத் தொன்மையானது. அகத்தியர் அத்ரி காலத்தில் உருவான ஆலயம் அது. மேற்கு பார்த்த லிங்கம் அப்போதே உருவாகியிருந்தது. அவ்வளவு பழமையானது.
இந்த ஆலயத்தின் தலவரலாறு கோரக்க முனிவரிடம் இருந்து தொடங்குகின்றது.
கோரக்க முனிவர் சிவனை நினைந்து அத்ரி மலையில் தவமிருந்தார். அவருக்கு முழு நினைவும் சிவனாக இருந்தது. சிவனின் ஒவ்வொரு அசைவையும் அவரின் ஒவ்வொரு காட்சியும் தியானித்துக் கொண்டிருந்தார்.
அகத்திய முனி சிவனின் கல்யாண கோலத்தை காண விரும்பியது போல் கோரக்கருக்கும் ஒரு ஆசை இருந்தது. அது தட்சனின் யாகத்தில் சிவன் நின்ற அந்த உக்கிரமான வடிவம்.
தன்னை மதிக்காமல் தட்சன் செய்த யாகத்தில் சிவன் எவ்வளவு ஆவேச கோலத்தில் நின்றிருப்பார் என்பதை காண விரும்பினார். சிவன் அவரின் நோக்கம் கண்டு புன்னகைத்தார்.
கோரக்கருக்கு தன்னை வெளிபடுத்த விரும்பிய சிவன், இந்த மேலநத்தம் தலத்தில் அக்னிவடிவாக எழும்பினார். பெரும் வெப்பம் அங்கே சூழ்ந்தது.
அந்த வீரியத்தின் வெம்மையினை தாங்கமுடியாத மக்கள் எல்லா உயிர்களுடனும் வாடினார்கள். நேரம் செல்ல செல்ல வெப்பம் கடுமையாக அதிகரித்தது.
அங்கே உலோகங்கள் உருகத் தொடங்கின. வீடுகளும் பொருட்களும் மெல்ல மெல்ல வெப்பத்தால் உருகின. வெப்பம் கடுமையானது.
முதலில் ஆறுதல் கொடுத்த தாமிரபரணி கொதிக்க தொடங்கிற்று. மக்கள் அஞ்சி பின்னால் செல்ல தொடங்கினார்கள். ஆனாலும், வெப்பம் விரட்டியது.
நெருப்பும் அது கொடுத்த வெம்மையும் எல்லா இடத்தையும் விழுங்கி பரவிக்கொண்டே இருந்தது. கரிக்காதோப்பு, கருங்காடு, கரிசூழ்ந்தமங்கலம் என பரவிய நெருப்பின் வேகமான வீரியம் கண்டு கலங்கிய மக்களின் கதறல் கண்டு சித்தர்கள் பலர் வந்தார்கள்.
அவர்கள் இது சிவனின் ஆட்டம் என அறிந்து, சில பரிகாரங்களை செய்யும் விதமாக கருங்காடு எனும் இடத்தில் ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து வைத்து வழிபட்டார்கள். இதற்கு மேல் நெருப்பு பரவவேண்டாம் எனக் கெஞ்சினார்கள். சிவன் எல்லையில் நின்று காக்கவேண்டும் என மன்றாடினார்கள்.
அதனால் அந்த “பரவா எல்லை நாதர்" எனப் பெயரிட்டார்கள். அந்த லிங்கம் இன்றும் உண்டு.
ஆனாலும், தீ இன்னொரு பக்கம் அடங்கவில்லை. கொதித்த தாமிரபரணியின் இன்னொரு பக்கம் வீரியம் அதிகரித்தது.
இனி நெருப்பு மற்ற இடங்களில் பரவும் என அஞ்சிய சித்தர்கள் பெரும் சித்தரான கோரக்கரிடம் சரணடைந்தார்கள். கோரக்கர் அவர்களின் துயரம் தீர்க்க ஓடி வந்தார்.
அவர் மனமார வேண்டினார். சிவன் தனக்கு சரியான பாடம் கற்பித்ததை உணர்ந்தார். சிவனிடம் கேட்கக் கூடாத விஷயங்களை கேட்டுவிட்டோமோ எனப் பதறினார்.
சிவனிடம் பெரும் மன்னிப்பு கோரினார். இந்த லிங்கத்தின் உக்கிரம் தணிய அதன் நேர் எதிரே சற்றுத் தள்ளி ஒரு லிங்கத்தை கிழக்கு நோக்கி ஸ்தாபித்தார்.
அதற்கு "அழியாபதி ஈஸ்வரர்" எனப் பெயரிட்டார்.
இந்த லிங்கத்தை ஸ்தாபித்ததால் மேலநத்தம் அக்னீஸ்வரர், கருங்காடு "பரவா எல்லை நாதர்" இந்த "அழியாபதி ஈஸ்வரர்" என எல்லாமும் ஒரு முக்கோண வடிவில் வந்தது.
இங்கே ஒரு சூட்சும விதி வேலை செய்தது. இரு கிழக்கு நோக்கிய லிங்கம், ஒரு மேற்கு நோக்கிய லிங்கம் எனும் வடிவில் அந்த சூட்சும விதி நல்ல பலனைக் கொடுத்தது.
சிவனும் கோரக்கருக்கு தன் வடிவத்தை காட்டியபின் உக்கிரம் தணிந்தார். மேலநத்தம் அக்னீஸ்வரர் குளிர்ந்து போனார்.
அவருக்குப் பல பரிகாரங்களைச் செய்து ஆலயத்தினை உருமாற்றினார் கோரக்கர். பின், இமயத்தில் இருந்து கோமதி கல் கொண்டுவரபட்டு அங்கே அன்னை வடிவம் உருவாக்கப்பட்டு அவள் கோமதி அம்மாள் என்றானார்.
இன்று அக்னீஸ்வரரும் கோமதி அம்மாளும் அதே மேல நத்தத்தில் இருந்து அருள் பாலிக்கின்றார்கள். அதிலிருந்து இந்த ஆலய வரலாறு தொடங்குகின்றது.
இந்த ஆலயம் தட்சனின் யாக காட்சியினை அப்படியே தாங்கி நிற்கும் ஆலயம். கோரக்கர் காண விரும்பிய அந்த காட்சியினைக் காட்டி சிவன் அருள் பாலித்த ஆலயம்.
எப்படி தட்சன் யாகத்தில் சிவனை எல்லாத் தேவர்களும் பணிந்தார்களோ, எப்படி சிவனே பிரதானம் என சரணடைந்தார்களோ, அப்படி முழுக்க சரணடையும் தத்துவத்தை தரும் ஆலயம் இது.
இங்கே சிவனே சரணம். அவரே முழு சரணம் என யார் சரணடைவார்களோ, எல்லாம் வல்ல சிவனே இனி முழுக்க அடைக்கலம் என சரணடைவார்களோ அவர்கள் எல்லாக் காவலும் பெறுவார்கள்.
துன்ப நெருப்பு அவர்களை வாட்டாது. முன் ஜென்ம கர்மத்தின் பாதிப்பு அவர்களுக்கு இருக்காது. கர்மம் வெப்பமாய் எரிக்காது.
அந்த வரத்தை இந்த ஆலயம் தரும். முழுக்க தரும்.
வாழ்வின் எல்லா நெருக்கடியும் வெப்பமாய் எரிக்கும் போது இந்த ஆலயத்திற்கு வந்து சிவனை சரணடைந்தால் எல்லாமும் குளிர்ச்சியாய் மாறும்.
நெருப்பு முன் எந்த அசுத்தமும் நிற்க முடியாது, அது எல்லாவற்றையும் விழுங்கும், நெருப்பே அசுத்தங்களை சாம்பலாக்கும்.
அப்படி ஒருவனின் ஆகாத கர்மங்களை, கெட்ட கர்மங்களை எரித்துப் போட்டு முழு ஞான பக்குவம் தரும் ஆலயம் இது.
அக்னி வடிவில் சிவன் உக்கிரமாக நின்றதால் இங்கு ஆட்டுத்தலையுடன் காட்சியளிகின்றார். அக்னி பகவானின் வாகனம் ஆடு என்பது குறிப்பிடத்தக்கது.
நந்தி பகவான் ஆட்டுத் தலையுடன் இருக்கும் ஒரே தலைவன் இதுதான்.
அந்த மேலநத்தம் ஆலயத்துக்குள் நுழைந்தால் வலதுபுறம் பிரணவ கணபதி, அகோர கணபதி, வஸ்ய கணபதி என மூன்று கணபதிகள் வீற்றியிருக்கின்றனர்.
இந்த மூன்று கணபதியினையும் வணங்கினால் எல்லா வசீகர சக்திகளும் கிடைக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி அடையும் பலம் கிடைக்க்கும்.
அதை அடுத்து மேல்பகுதியில் அனுமன் இராவணனின் சபையில் தன்னுடைய வாலையே சிம்மாசனமாக அமைத்து அதன் மேல் அமர்ந்த காட்சி உண்டு.
இந்த ஆலயத்தில் சரணடைந்து வணங்கினால், அந்த விநாயகர் மூவரையும் வணங்கினால் அனுமன் கொண்டிருக்கும் அனைத்து சித்து பலன்களும் கிடைக்கும்.
இடதுபுறம் சூரியன், அதிகார நந்தி ஆகியோர் உள்ளனர். அதனையடுத்து சந்திரன், வள்ளி-தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
பிராகாரத்தில் நவக்கிரகங்கள், பைரவர் ஆகியோருக்கு தனித்தனிச் சந்நிதிகள் அமைந்துள்ளன.
மற்ற கோயில்களில் தட்சிணாமூர்த்தியின் அருகே நான்கு பேர் அமர்ந்திருப்பர். நான்கு வேதங்களும் அவர் முன் அமர்ந்திருப்பதாகப் பொருள்.
இங்கு அவர் முன் ஏழு பேர் அமர்ந்திருக்கிறார்கள். இது சப்த ரிஷிகளை குறிப்பது. ஏழு ரிஷிகளும் அவர்முன் இருந்து அருள் பெரும் அற்புதமான தலம் இது.
இந்தக் கோமதி அம்பாள் சிலை இயமலமலையில் இருந்து கொண்டுவரப்பட்டது. அவளுக்கு இங்கு நடக்கும் ஆடிபூரம் வெகு விசேஷமானது. அந்த ஆடிப்பூர வளைகாப்பு இன்னும் விசேஷம்.
குழந்தைபேறு இல்லாப் பெண்கள் இந்த ஆடிப்பூரம் அன்று இந்த வழிபாட்டை செய்து குழந்தை வரம் பெற்று பின் சாட்சியாக வந்து நன்றிக்கடன் தீர்ப்பது வழமையான ஒன்று.
ஆம். இந்த அன்னை குழந்தை வரம் தருபவள்.
இத்தல தீர்த்தமாக தாமிரபரணியின் அக்னி தீர்த்தம் விளங்குகிறது. இந்தத் தீர்த்தத்தில் ஒருவர் தெற்கு நோக்கி முழ்கி எழுந்தால் அவர்களின் பாவமெல்லாம் பொசுங்கி விடும்.
சிவபெருமான் இங்கு தன் ஐந்தொழிலில் ஒன்றான அழித்தல் தொழிலை செய்கின்றார். அவரை அண்டுவோரின் எல்லா பாவகர்மாவும் இங்கு அழிக்கப்படுகின்றது, கர்மவினை எரிக்கப்படுகின்றது.
தச நாடிகளில் இது சமானன் எனும் வாயுவினைப் பலப்படுத்தும் ஆலயம்.
நெல்லைக்கு அண்மித்து இருக்கும் இந்த ஆலயத்தை சென்று தரிசியுங்கள், அக்னி தீர்த்தத்தில் நீராடி மேற்கு நோக்கி நிற்கும் அந்தச் சிவனை தரிசித்தால் கர்மம் எல்லாம் எரிந்துபோகும்.
வாழ்வின் எல்லாக் கர்மவினையும் சாபமும் எல்லாமும் அழிந்தே போகும்.
இந்த ஆலயம் முக்கோணத் தத்துவம் கொண்டது. அதனால் இங்கு வழிபட்டு அதன் பின் கருங்காடு "பரவா எல்லை நாதர்" ஆலயம், பின் கருப்பந்துறை "அழியாபதி நாதர்" ஆலயம் என மற்ற இரண்டையும் வழிபட்டால் பூரண பலன் கிடைக்கும்.
அதுவும் கருப்பந்துறை சித்தர்கள் உலாவிய இடம். இன்றும் அரூபியாய் அவர்கள் அருள்பாலிக்கும் இடம். காசியில் இருந்து வந்து நெல்லையப்பர் கோவிலில் அடியாராய் வாழ்ந்த அமாவாசை சித்தர் அங்குதான் சமாதி அடைந்திருக்கின்றார்.
அந்தச் சமாதி பெரும் சூட்சும சக்தி தலம், இன்றும் சித்தர் அரூபமாய் அமர்ந்து அருள் வழங்கும் தலம்.
இந்த மூன்று கோவில்களுமே சித்தர்களின் ஆலயங்கள். மேலநத்தம் ஆலயம் சித்தர்களால் உருவானது. கருப்பந்துறையினை கோரக்கர் ஸ்தாபனம் செய்த லிங்கம், கருங்காடு சித்தர்கள் பலரால் ஸ்தாபிக்கப்பட்டது.
ஆக, இந்த மூன்று ஆலயங்களுமே சித்தர்களின் தனி ராஜ்ஜியங்கள் அவற்றில் மஹாராஜாவாக நின்று சிவன் பெரும் அருள் பொழியும் ஆலயங்கள்.
அங்கு சென்று வழிபட்டு உங்கள் பாவவினை எல்லாம் எரித்து சிவன் அருளில் நல்ல வளங்களை, நல்ல ஒளியினை, நல்ல சக்தியினை பெற்று பெருவாழ்வு வாழவேண்டியது ஒவ்வொருவரின் கடமை.
அக்னி என்பதன் தத்துவம் சிவன் அக்னிரூபமாக நின்றதன் தத்துவம், ஆட்டுகடாவினை அக்னி பகவானுக்கு கொடுத்த தத்துவம் எளிதானது
அக்னி எப்போதும் கட்டுக்குள் இருத்தல் வேண்டும், கோவில் தீபம் புனிதமானது ஒளிகொடுப்பது ஆனால் காட்டுதீ அபாயமானது
உடலில் வெப்பம் அவசியம் ,வெப்பமில்லா உடல் பிணம். ஆனால் அதீத வெப்பம் உடலுக்கு நோய் உடலினை அழித்துவிடும்
அப்படியே மானிடர் வாழ சில தேவைகள் அவசியம், அந்த தேவைகள் பேராசையாய் பெரும் தீயாய் எழும்போது பெரும் பெரும் பாவங்களும் தீய கர்மாக்களும் அதிகரிக்கின்றன
இந்த பேராசைதான் ஆணவம் அகங்காரம் என விரிந்து பஞ்சமா பாதங்களில் ஒருவனை வீழ்த்தி, கர்மாவினை அதிகரித்து பிறப்பு சுழலில் தள்ளுகின்றது
இங்கே அக்னீஸ்வரராக சிவன் போதிக்கின்றார் என்பதும், கோரக்கர் ஒரு சமநிலையினை ஏற்படுத்தினார் என்பதும் மாய ஆசைகள் எப்போதும் ஆபத்தானவை, தேவைகள் மானிடர்க்கு அவசியம் ஆனால் தேவைகள் ஆசை தீயாக எழுந்தால் அது அழித்துவிடும், அந்த ஆசைகளை கட்டுபடுத்தி சமநிலை பேணுதல் நன்று, ஞானம் மிகுந்தால் ஆசைகள் கட்டுபடும் என்பது இங்கு சொல்லபடும் போதனை
அக்னிபகவானுக்கு ஆட்டுகடா வாகனம் எனும் தத்துவம் அது, ஆட்டுமந்தையின் முன்னால் செல்வது கடா. ஆட்டுமந்தை சரியாக நடதபடாவிட்டால் அவை எல்லாம் தின்று மிதித்து பெரும் அழிவினை கொடுக்கும்
அவைகளை பல வகையில் கட்டுபடுத்தி காவல் இருத்தல் அவசியம், நெருப்பு என்பது கட்டுக்குள் இருத்தல் வேண்டும் என்பதற்கே ஆட்டுகடாவினை வாகனமாக கொடுத்தார்கள்
இந்த ஆசைகளை மாயைகளை கட்டுபடுத்தி உங்களுக்கு எது தேவையோ அதை மிக சரியாக தரும் ஆலயம் இது, எது அவசியமோ அதனை முழுக்க தந்து உங்களை காக்கும் அற்புத தலங்கள் இவை
அங்கு தீபமேற்றி வழிபடுன்கள், அப்போது கோரக்க சித்தரில் தொடங்கி அமாவாசை சித்தர்வரை நினைத்து வழிபடுங்கள். அதன் பின் ஞான அக்னியும், செல்வாக்கும் சொல்வாக்கும் மிக்க சக்தி அக்னியும் உங்களுள் எழும். வாழ்வே யாரும் உங்களை அசைக்கமுடியாத நெருங்கமுடியாத இடத்துக்கு மாறும். அது சத்தியம்
நன்றி பிரம்ம ரிஷியார்
Comments
Post a Comment