Temple info -2978 Thenmalai Thripureswarar Temple

 


தசவீராட்டாண தலம் 07 : தென்மலை திரிபுரேஸ்வரர் ஆலயம்


தசவீராட்டாண ஆலயங்களில் ஏழாம் ஆலயம் தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மேற்கு தொடர்ச்சி மலையின் அடியில் அமைந்திருக்கும் திரிபுரேஸ்வரர் ஆலயம்


திரிபுர ஈஸ்வரர் என்றால் முப்புரமும் எரித்த சிவன் என்பது எல்லோரும் அறிந்தது, அந்த புராணம் இதுதான்


தாருகன் என்ற அரக்கனின் புதல்வர்கள்  மூன்று பேர் உண்டு. வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் என்ற மூவரும் பெரும் சக்திபெற தவமிருந்தார்கள், சிவபக்தர்களான அவர்கள் சிறப்பு வரத்துக்காக பிரம்ம தேவனை நோக்கி கடுந்தவம் புரிந்தார்கள். 


தவத்தை மெச்சி, தரிசனம் அளித்த நான்முகனிடம், “நினைத்த இடமெங்கும் செல்லும்படியாக ஆகாய மார்க்கத்தில் பறக்கத் தக்க மூன்று கோட்டைகள் வேண்டும். நாங்கள் மூவரும் ஒன்று சேர்ந்து இருக்கும்போது மட்டுமே ஒரே கணையால்தான் எங்கள் உயிர் பிரிய வேண்டும்” என்ற அரிய வரத்தைப் பெற்றார்கள். 


அப்படி தங்கம் வெள்ளி , இரும்பாலான மூன்று பறக்கும் கோட்டைகள் அவர்களுக்கு கிடைத்தன‌

வரம் பெற்ற பின் இந்திராதி தேவர்களை துன்புறுத்தினார்கள்.  தேவலோகத்தை மட்டுமல்ல எல்லா லோகத்தையும் இம்சைத்துவிட்டு பறக்கும் கோட்டையில் பத்திரமாக வாழ்ந்தார்கள்


எல்லா உலகமும் இவர்களால் பெரும்பாடுபட்டது, அதே நேரம் பிரம்ம வழிபாடும் சிவவழிபாடும் மிக சரியாக செய்தார்கள், சிவலிங்க வழிபாடு எப்பொழுதும் நடந்தது


இவர்கள் தேவர்களின் கடமைகளை செய்யவிடாமல் அடிமையாக்கி பிரபஞ்சத்தையே ஆட்டுவித்ததால் நடுங்கிய தேவர்கள் விஷ்ணுவிடம் சரணடைந்தனர்


அவர்களை அழிக்க வல்லவர் சிவன் ஒருவரே ஆனால் தன் பக்தர்களை அவர் அழிக்க தயங்குவார், அவர் அவர்களை அழிக்கவேண்டுமானால் முதலில் சிவவழிபாட்டை அவர்கள் கைவிட வேண்டும் என சிந்தித்த விஷ்ணு அதற்கொரு திட்டம் வகுத்தார்


ஆதிபுத்தர் எனும் தன் அம்சத்தை நாரத முனியுடன் அவர்கள் கோட்டைக்கு அனுப்பி இம்மூவரும் பெரும் சக்தி பெற்றுவிட்டனர், சிவனுக்கு சக்தியெல்லாம் இல்லை இங்கு நடப்பதெல்லாம் இயற்கை  , சிவன் சக்தியற்றவர் என நம்ப வைத்து அவர்களை கர்வமும் அகந்தையும் கொள்ள செய்தார்


அந்த மூவரும் சிவவழிபாட்டை மறந்தனர், சிவலிஙகத்தை கைவிட்டனர், விருப்படி தங்களே கடவுள் என சொல்லிகொண்டனர், பிரம்மனையும் மறந்தனர்


இப்படி அவர்கள் தன்னை மறந்து அகங்காரிகளாக ஆடும்பொழுது சிவன் அவர்களை அழிக்க திருவுளம் கொண்டார்


அந்த ஆதிபுத்திரரும் அந்த மூவரையும் தூண்டிவிட்டு நீங்களே மும்மூர்த்திகள் மூவரும் ஒன்றாக சந்தியுங்கள் என ஆசையினை தூண்டினார்


அகங்காரமிக்க மூவரும் சாபம் மறந்து ஒன்றாய் கூட விரும்பினர்


அவர்கள் கூடும் நேரம் அவர்களை அழிக்க சிவன் திருவுளம் கொண்டார், உடனே விஸ்வகர்மா, ரதம் ஒன்றை தயாரிக்கத்தான், மேருமலை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பு நாணாகவும் அமர்ந்தது


நான்கு வேதங்கள் நான்கு குதிரைகளாக்கி, விஷ்ணுவினை சக்திமிக்க ஒரே அம்பாக்கி (சக்திமிக்க அம்பால்தான் அவர்களை அழிக்க முடியும்) பிரம்மா சாரதியாக இயக்க திரிபுரங்களை எதிர்க்கப் புறப்பட்டார் சிவபெருமான்.


சிவன் ஏறியபின்னும் தேர் நகரவில்லை காரணம் தேரின் அச்சு யமனும் அக்னியுமாக இருந்தார்கள் அவர்கள் இல்லாமல் சிவன் வெல்வது முடியாது


விநாயகர் இதை கவனித்து தேர் அச்சுக்கு வேறு ஏற்பாடுகளை செய்து இருவரையும் சிவனோடு அனுப்பினார், சிவன் கிளம்ப தயாரானார்


அப்பொழுது சில தேவர்கள் தங்கள் சக்தியின்றி சிவன் வெல்லமுடியாது என கருதினர், அதை அறிந்த சிவன் ஒரு புன்னகை பூத்தார், அந்த புன்னகையிலே மூன்று தேர்களான முப்புரமும் எரிந்து சாம்பலானது, மூன்று அசுரர்களும் சிவன் காலடியில் விழுந்தனர்


 முன்பு தன்னைப் பூஜித்து வந்த அந்த மூவரில் இருவரை தன் வாயில் காப்போராகவும், ஒருவரை குடமுழா  எனும் முரசை முழுக்குபவராகவும் தமது அருகில் இருக்கும்படி ஆணையிட்டார் சிவன் 


இதுதான் சிவன் முப்புரத்தை எரித்த கதை


இந்த புராண சம்பவத்தின் சிவனேதான் இந்த ஆலயத்தில் திரிபுரேஸ்வரராக அமர்ந்திருக்கின்றார், யுகங்களை தாண்டிய காலத்தில் சித்தர்களால் அடையாளம் காட்டபட்டு அமைக்கபட்ட ஆலயம் இது


இது ஒரு காலத்தில் முழுக்க அழிந்து போனது, பின்னாளில் பாண்டிய மன்னன் ஒருவன் இங்கே முகாமிட்டு எதிரிகளை எதிர்க்க சிவனை மன்றாடியபோது வெளிபட்ட ஆலயம் இது


பாண்டியர்கள் சிவபாத சேகரர்கள், தென்காசி பக்கம் அவர்கள் அடிக்கடி சேரர்களுடன் போரிட  வேண்டி இருந்தது, சில சிற்றரசுகளின் தொல்லையும் உண்டு


அப்படி ஒருமுறை பாண்டியன் மதுரை ஆலவாயனை தொழுது விட்டு இங்கு வந்து முகாமிட்டபோது பெரும் காற்றின் நடுவே அசரீரியாய் எழுந்த சிவன் "மன்னா, நாம் திரிபுரேஸ்வரராக முப்புரம் எரித்த சிவனாக இங்கு குடிகொண்டுள்ளோம், எமக்கு ஆலயம் எழுப்பி வழிப்டு உன் பகை ஒழியும்" என கூறினார்


அப்படியே அந்த சுயம்பு லிங்கம் மீள கண்டெடுக்கபட்டு இந்த ஆலயம் பாண்டிய மன்னர்களால் ஸ்தாபிக்கபட்டது


இந்த ஆலயம் ஆந்திர மாகாண காளகஸ்திக்கு இணையான தலம், வாயு தலம்.


ஆம்,இங்கு அமைக்கபட்டிருக்கும் பஞ்ச பூத தலங்களில் இது வாயுக்கானது. அதை போல இதர பஞ்ச பூதங்களின் தலமும் அருகில் உண்டு


சங்கரன்கோயில் மண் தலமாகவும், தருகாபுரம் நீர் தலமாகவும், தேவதானம் ஆகாய தலமாகவும், கரிவலம் வந்த நல்லூர் அக்னி தலமாகவும் அமைக்கபட்டிருக்கின்றன‌


இந்த ஆலயத்தின் தத்துவம் புராண அடிப்படையில் திரிபுரம் எரித்த கதையின் லிங்கமாக அக்கால சித்தர்களால் ஸ்தாபிக்கபட்டாலும் இதன் தாத்பரியம் ஆழமானது


இந்துமதம் கண்ணாடி போன்றது எதை நாம் காண்கின்றோமோ அதை காட்டும், அது காமதேனு போன்றது எதை கேட்கின்றோமோ அதை கொடுக்கும் அவ்வளவு நுணுக்கமாக எல்லா வகை காரியங்களையும் தரும்படி அது நிறுவபட்டிருக்கும்


இந்த முப்புர ஆலயங்கள் ஒவ்வொரு தத்துவபடி பல நிறுவபட்டிருக்கும், முப்பிடாரி முப்பந்தல் முன்றுமுகம் அம்மன் என்பதெல்லாம் இந்த தத்துவங்களே


அதாவது மன்னர்கள் காலத்தில் இம்மாதிரி ஆலயங்கள் எல்லையில் காவலுக்கு நிறுத்தபட்டிருக்கும், எதிரி நாட்டு மன்னன் கல்வி, செல்வம், வீரம் என எவ்வகையில் வந்தாலும் , எதிலாவது மிகுந்து வந்து தன்னை அழிக்க வழ்ந்தாலும் தடுக்கும்படி , பகைவரை ஒழிக்கும்படி நிறுத்தியிருப்பார்கள்


இந்த ஆலயங்கள் இப்படியான காவலை கொடுக்கும், அதையே தன்னை வழிபடுவோர்க்கு நிரம்ப கொடுத்து எதிரிகளை விரட்டியடிக்கவும் வழி செய்யும்


ஆன்மீக வாழ்வில் இது முக்குணங்களையும் ஒழித்து ஞானம் தரும்


யோக வாழ்வில் இது இடகலை, பிங்கலை, சூரிய கலை எனும் மூன்று நாடிகளையும் துலங்க வைத்து மூன்றாம் கண்ணை திறக்க வைக்கும்


இப்படி எதனை கேட்கின்றோமோ அதனை தரும் ஆலயம் இது


இது சுயம்புலிங்கமாக உருவான தலம், அக்கால சித்தர்கள் இதனை திரிபுரம் எரித்த சிவனின் பெயரால் ஸ்தாபித்து தந்தார்கள்


இந்த ஆலயத்தின் அன்னை சிவபரிபூரணியம்மாள், அதாவது சிவனின் முழு அருளையும் பெற்றவள் அந்த அன்னை, சிவன் அவளில் பரிபூரணமாக கலந்திருக்கின்றார். அந்த அன்னையினை வேண்டி கேட்கும் எல்லாமும் பரிபூரணமாக கிடைக்கும்


இந்த ஆலயம் மேற்கு நோக்கி அமைந்திருக்கும் அற்புத ஆலயம், தேவர்களின் கர்மா அந்த மூன்று அசுரர்களின் கர்மா என எல்லாமும் தீர்த்த அந்த சிவன், பகைவர்களை ஒடுக்கி தேவர்களை காத்த சிவன் இங்கும் தன்னை நம்பி வரும் ஒவ்வொருவரையும் காக்க , அவர்கள் கர்மம் தீர்த்து காக்க மேற்கு நோக்கி அமர்ந்திருக்கின்றார்


ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. தென்மலை குளம் கோவிலுக்கு முன்பாக அமைந்திருக்கிறது. கோவிலுக்குள் நுழைந்தால் தீர்த்தக் கிணறு உள்ளது. அதைத் தாண்டி உள்ளே சென்றால் சிவபரிபூரணியம்மாள் கருணை முகத்துடன் காட்சி தருகிறார்.


இடது புறத்தில் சிவன் சன்னிதி உள்ளது. நந்தி அதிகார நந்திகளைக் கடந்து உள்ளே சென்றால் அங்கே லிங்க வடிவத்தில் சிவ பெருமான் உள்ளார் லிங்கநாதர்  வடிவில் அவர் காட்சி தருகிறார். ஆலய பிரகாரத்தில் கன்னி மூல விநாயகர் முருகன் சனீஸ்வரன் துர்க்கை சண்டிகேஸ்வரர் தட்சிணாமூர்த்தி சண்டிகேஸ்வரி காலபைரவர் நடராஜர், சிவ‌காமியம்மாள் நவக்கிரகம் என பல சன்னதிகள் உண்டு


முருகபெருமான் சன்னதி உண்டு, சனி பகவானுக்கான சன்னதியும் உண்டு


இங்கு தட்சினாமூர்த்தி வித்தியாசமாக அதாவது நான்கு வேதங்களை தாண்டி சப்த ரிஷிகளுக்கும் போதிக்கும் கோலத்தில் அமர்ந்திருப்பார், இது ஈசனே பிரபஞ்சத்தின் அதிபதி என்பதை சொல்லும் காட்சி


இது திரிபுரம் எரித்த சிவன் என்பதால் அந்த முப்புரம் எரிக்கும் போது கடைசியில் கைகொடுத்த விநாயகருக்கு இனி இடம் கொடுக்கபட்டுள்ளது


இங்கு விநாயகர் யானை வாகனத்துடன் காட்சியளிக்கின்றார், இவர் சிவனுக்கு எதிரில் அமர்ந்திருப்பார். அணுக்கிய விநாயகர் என அவருக்கு பெயர்


இந்த ஆலயம் தசவாயுக்களில் வியானன் எனும் வாயுவினை சமபடுத்தும் சக்தி கொண்டது, உடல் முழுக்க எல்லா உறுப்பும் சீராக இயங்கவும்,  ஸ்பரிச உணர்வு முதல் எல்லா உணர்வும் சரியாக கிடைக்க இந்த வாயு அவசியம்


நாடிகளில் இந்த ஆலயம் திரிநாடிகள் அதாவது இடகலை பிங்கலை சுழுமுனை ஆகிய மூன்று நாடிகளையும் சரிபடுத்தும் சக்தி கொண்டது


இந்த ஆலயத்தில் திருமலை சித்தர் என்றொரு மகா சித்தர் தியானம் செய்து சமாதியானார், அவரின் ஜீவசமாதி இப்போதும் உண்டு


இந்த ஆலயம் பாண்டிய மன்னர் காலத்தில் மட்டுமல்ல, பிற்காலத்திலும் மன்னர்களுக்கும் தன்னை வேண்டி வருவோர்க்கும் பகை ஒழிக்கும் ஆலயமாக நின்றது, இப்போதும் பகைவர் ஒழிய வரமருளும் ஸ்தலம் அது


மதுரையினை நாயக்கர் ஆளதொடங்கியபோது சிவகிரி பாளையம் உருவானது, சிவகிரி பாளையமும் அடிக்கடி போருக்கு செல்லவேண்டிய கட்டாயம் உண்டு, அப்படி அவர்கள் போருக்கு தயாரான போது சிவனே பாளையகாரர் கனவில் தோன்றி தான் அங்கு குடிகொண்டிருப்பதையும், தன்னை வழிபட்டு செல்லும்படியும் கூறினார்


அவ்வண்ணமே அந்த சிவனை வழிபட்ட பாளையக்காரர்கள் பெரும் வெற்றி பெற்றார்கள், இன்றும் சிவகிரி பாளையத்து வம்சாவழிகள் அந்த திரிபுரேஸ்வரரை வணங்காமல் எதுவும் செய்வதில்லை


இந்த ஆலயம் வாயுதலம் என ஏன் சொல்லபடுகின்றது என்றால் அங்கு நிலவும் சூட்சுமம் அப்படி


ஆம், மெய்சிலிர்க்க வைக்கும் சாட்சி அது


பொதுவாக கருவறையில் காற்று வீசாது, தீபம் செங்குத்தாக நின்று எரியும் இது இயல்பானது. ஆனால் இங்கு வைக்கபடும் தீபம் காற்றில் ஆடும்


ஆம் அங்கே சிவன் வாயுவாக உண்டு என்பது அதன் சாட்சி, எந்த கோவில் கருவறையிலும் ஆடாத தீபம் இங்கு காற்றே இல்லா சூழலிலும் அசையும், அது சிவனின் மூச்சு


அவ்வளவுக்கு நுணுக்கமான சூட்சும ஆலயம் இது


சில காலங்களுக்கு முன் பக்தர் ஒருவர் அந்த லிங்கத்தை படமாக எடுத்தபோது பச்சை நிற சக்கரத்தில் ஓம் என்ற வார்த்தையுடன் படம் விழுந்தது, இன்றும் அந்த சாட்சி உண்டு


அந்த ஆலயத்தில் எக்காலமும் சிவன் உண்டு, வாயு வடிவில் உண்டு


மூச்சுகோளாறு , நுரையீரல் கோளாறு இன்னும் நாசி எனும் மூக்கு பிரச்சினைகள், சுவாசகுழாய் பிரச்சினைகள் என எல்லாமும் தீர்ந்து போகும் தலம் அது


தென்காசி பக்கம் செல்லும் போது இந்த ஏழாம் வீராட்டாணம் தலத்தை தரிசிக்க மறவாதீர்கள்


அந்த ஆலயம் மூவகை ஆசிகளையும் தரும், மூவகை செல்வமும் தரும், பகை ஒழித்து வாழ்வு தரும், நீங்கள் தவகோலம் கேட்பின் மூவாசைகள், முக்குணம் ஒழித்து யோக நிலை தரும்


இந்த தலம் பிரசாதி தலம் எனும் வகையில் வரும், அதாவது தூய்மையான, பரிசுத்தமான, மகா சக்தியான இறையருள் தலம் எனும் பொருள் அதற்கு உண்டு


அந்த சிவனிடம் எதை கோருவீர்களோ அதை சிவன் தருவார், பெரிய பெரிய தடை தகர்த்து பகை முடித்து நீங்கள் வேண்டிய அத்தனையும் தருவார் அதற்கு சிவகிரி பாளையம் போல் உங்கள் வாரிசுகளே சாட்சியாக நிற்கும் இது சத்தியம்

Comments

Popular posts from this blog

Temple info -1830. Perunna Subramanya Swamy Temple, Kottayam. பெருந்நா சுப்ரமண்ய ஸ்வாமி கோயில், கோட்டயம்

Temple info -2619 Udayanapuram Subramanya Swamy Temple,Vaikom,Ernakulam. உதயானபுரம் சுப்ரமண்யஸ்வாமி கோயில்,வைக்கோம்,எர்ணாகுளம்

Birla Mandir Hyderabad பிர்லா மந்திர்,ஹைதராபாத்