Temple Info -2977. Narsinganathar Temple,Angamangalam

தசவீராட்டாண தலம் 08 : நரசிங்கநாதர் திருக்கோவில் அங்கமங்கலம்

தூத்துக்குடி மாவட்டம்  ஏரல் தாலுக்கா அழ்வார்த்திருநகரி வட்டத்தில் உள்ள அங்கமங்கலம் கிராமத்தில் இந்த நரசிங்க நாதர் ஆலயம் அமைந்துள்ளது அன்னை அருள்மிகு ஆவுடையம்மாள்

இந்த ஆலயத்தின் வரலாறு இரணியன் காலத்தில் இருந்து தொடங்குகின்றது, மலையாள தேசத்தில் எப்படி மகாபலி கதை பிரசித்தியானதோ அப்படி இங்கு இரணியன் வதம் பிரசித்தமானது

எல்லோரும் அறிந்த நரசிம்ம அவதாரம் வழிபட்ட கோவில் இது, இரணியன் வரலாற்றில் இருந்தே இந்த ஆலய தலபுராணம் தொடங்குகின்றது

சத்யுகத்தில் காசியப முனிவருக்கும் அதித்திக்கும் இரணியகசிபு மற்றும் இரணியாக்சன் இரு மகன்கள் பிறந்தனர், ஆகாத நேரத்தில் பிறந்ததால் அசுரகுணம் வாய்த்தது

இரணியாக்சனை வராகமாக வந்து விஷ்ணு அளித்ததால்  இரணியன் விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலியவனாக்கிக் கொள்ள  பிரம்மாவை நோக்கித் தவமிருந்தான்.

அப்படி அவனுக்கு பிரம்மாவும் காட்சி தந்தார், அவன் அவரிடம் வலுவான வரம் வாங்கினான்

மூன்று உலகமும் அன்று ஆடி கிடந்தது, ஒரு அசுரன் ஒரே ஒரு அசுரன் அப்படி ஆட்டிவைத்து கொண்டிருந்தான், அவனின் கடும் தவம் மூலம் பிரம்மன் அவனுக்கு கொடுத்த வரம் அப்படி. அந்த வரத்தின் பலத்தில் அவன் கடும் ஆட்டம் ஆடினான்

முதுமையாலோ, நோயலோ, மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலோ, நீரிலோ, நிலத்திலோ, அந்தரத்திலோ மரணம் சம்பவிக்கக் கூடாது. எவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது என்ற வரம் அது

மிக நுணுக்கமாக எப்படி எல்லாம் மரணம் வருமோ அந்த வழிகளை எல்லாம் யோசித்து வாங்கியிருந்தான்
இதை வாங்க சொன்னவர் அவன் குரு சுக்கிராச்சாரி

ஈரேழு உலகமும் இரண்யனுக்கு அடங்கின, அவன் தேவர்களை அடக்கினான், பஞ்ச பூதங்களை விளையாட்டு பொருளாக்கினான், எல்லா உயிர்களும் உலகமும் அவனுக்க்கு ஏவல் பொருளாயினை

அக்கிரமத்தின் உச்சியில் அவன் இருந்தபொழுதுதான் அவன் மனைவி கருவுற்றாள், எல்லா அசுரனுக்கும் ஒரு பலஹீனம் இருக்கும் அல்லவா? அப்படி இரண்யனின் பலவீனம் அவன் பிள்ளை பாசம்

எல்லா அரக்கர்களும் சொந்தம், பாசம், என வகையாக சிக்கியிருப்பார்கள் அவர்களின் பலவீனம் அது, இரணிய கசிபுவும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

இதை அறிந்த பரம்பொருள் அட்டகாசமாக விளையாடியது, இரண்ய கசிபு தேவலோகத்துக்கு விளையாட்டு பார்க்க சென்றநேரம் நாரதர் அவன் கர்ப்பமான மனைவி முன் நின்று நாராயணின் பெருமைகளை சொல்லிவிட்டு ஓடிவிட்டார், கர்ப்பத்தில் இருந்த பிரகலாதனுக்கு அது ஆழபதிந்தது.

அவன் பேச தொடங்கியதில் இருந்து நாராயணன் பக்தனானான், வளர வளர அது அதிகரித்தது, குரு நாதர் சுக்கிராசாரியாரிடம் அனுப்பினால் சரியாகும் என மனதை தேற்றினான் இரணியன்

ஆம், அவன் வென்றுவைத்த ஈரேழு உலகுக்கும் அவனல்லவா? வாரிசு. நிச்சயம் இந்த இரணியன் சாகா வரம்பெற்ற, கொல்லவே முடியாத வரம்பெற்றவன் எனினும் பிள்ளைக்கு முடிசூடி பார்க்கும் ஆசையில்லாத தகப்பன் உண்டா?

அந்த பிள்ளை நாராயணன் பெயரை சொன்னால் எப்படி? தன் குல எதிரி மற்றும் ஒரே எதிரி பெயரை சொன்னால் தாங்குமா?

அசுரர்களின் பலவீனமே பிள்ளை பாசம், எல்லா அசுரர்களின் வாழ்வினையும் கவனியுங்கள் குடும்ப பந்தத்தில் சிக்கி கிடப்பார்கள், எல்லா ஆசைகளும் அளவின்றி பெருகும் அவர்களுக்கு குடும்ப பாசம் மிக பெரிதாய் இருக்கும்

சுக்கிராசாரியின் பாசறையும் பிரகலாதனை மாற்றமுடியவில்லை, நிச்சயம் அந்த குரு தன் மகன் மனதை மாற்றிவிடுவார் என நம்பி , சில நாட்கள் கழித்து "மகனே, உன் குரு என்ன சொல்லிதந்தார்?" என இரணியன் கேட்க "நாராயணன் ஒருவனே கடவுள், அவனை வழிபடுவதே பக்தி" என சொன்னான் பிரகலாதன்
சுக்கிராசாரியாரிடம் சீறினான் இரணியன்

"வணங்கதக்கவனும் வழிபட தக்கவனும் இரணியன் ஒருவரே, நாராயணன் நம் குல எதிரி" என்றுதான் சொல்லிகொடுத்தோம், எங்களிடமும் இதைத்தான் சொன்னோம், இளவரசன் என்றும் பாராமல் அடித்தும் பார்த்தோம் திருந்தவில்லை என வருந்தினார் சுக்கிராச்சாரி

எல்லா உலகையும் வென்று எதிரியும், எதிரி இருந்தாலும் கொல்ல்பட முடியாதவனுமாகிய இரணியன் நிம்மதி இழந்தான், அவனின் பாசம் அவனை கொன்று கொண்டிருந்தது

பிரகலாதனை அவனால் கொல்ல முடியவில்லை, அதே நேரம் அவன் நாராயணா என உருகுவதை சகிக்கவும் முடியவில்லை

பாலகன் அல்லவா? அவனுக்கு பாசம் காட்டினான் பலிக்கவில்லை, விளையாட்டு காட்டினான் அதில் வெற்றியில்லை

இனி அடியும் உதையும் மிரட்டலுமே இவனை திருந்த்த இயலும் என கடும் மிரட்டலில் இறங்கினான்
அவன் தங்கை ஹோலியா நெருப்பால் தீண்டமுடியா சக்தி பெற்றிருந்தாள், அவள் கையில் இவனை கொடுத்து தீயில் இறங்க சொன்னான், வீரர்களை அழைத்து பிரகலாதனை மலை உச்சிக்கு கொண்டு சென்று பயமுறுத்த சொன்னான்

படமெடுத்தாடும் நாகத்தின் முன்னால் அவனை வீசிவிடுவதாக மிரட்டினான், ஆனால் பிரகலாதன் மசிவதாக தெரியவில்லை

எவ்வளவு முடியுமோ அவ்வளவும் செய்து பார்த்தான் பிரகலாதன் கொஞ்சமும் நாராயணன் பக்தியில் இருந்து விலகுவதாக இல்லை

ஒரு நாள் அரசவை கூடியிருந்தது , இரணியனின் மந்திரிகளும் ராஜதானிகளும் சேனைகளும் கூடியிருந்தனர், அவனால் கட்டி இழுக்கபட்ட தேவர்களும், நவகிரகங்களும் அவன் முன்னால் குனிந்து நின்றனர்

மூவுலையும் அரசாள்பவனும், எதிரியே இல்லாதவனுமான அவனை எல்லோரும் வாழ்த்தி கொண்டிருந்தனர், அவனை கடவுள் என துதித்து கொண்டிருந்தனர்

ஒரே ஒரு குரல் மட்டும் "ஓம் நமோ நாராயணா.." என சொல்லிகொண்டிருந்தது

இரணியனின் அவையில் அப்படி குரல் ஒலிக்க ஒலிக்க எல்லோரும் அமைதியாயினர், அக்குரல் தனித்து ஒலித்தது, அது பிரகலாதனின் குரல்

ஆத்திரத்தாலும் அவமானத்தாலும் நிலை குலைந்த இரணியன் நிதானம் இழந்தான், பொதுவாக அசுரர்கள் அவமானபட விரும்புவதில்லை, அகங்காரம் அவர்களின் இயல்பு

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் பொங்கினான் இரனியன்

"ஏ கோடாரி காம்பே, தாழம்பூவில் வந்த பூ நாகமே. இங்கே வருவானா உன் நாராயணன், வரச்சொல் அவனை கொன்று, உன் சித்தப்பனை கொன்ற பழிக்கு பழி வாங்குகின்றேன், அவன் என்னை கண்டு ஓடி ஓழியும் பயந்தாங்கொள்ளி" என நகைத்தான் இரணியன்

"இல்லை தந்தையே, அவன் எங்கும் இருப்பான், உன்னையும் என்னையும் அறிவான்" என அமைதியாக சொன்னான் பிரகலாதன்

"ஏ பிரகலாதா அவன் எங்கே இருக்கின்றான், இங்கே ஒளிந்திருக்கின்றானா? வரச்சொல் வருவானா? வந்தால் என்னிடம் பிழைப்பானா? பகைமுடிக்காமல் விடமாட்டேன்" என சீறினான் இரணியன்

"அப்பா, அவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான். அடியவர் அவனை அழைத்தால் உடனே வருவான்" என பிரகலாதன் சொல்ல , எண்ணெய் விட்ட தீயாக எரிந்தான் இரணியன்

"என்னது தூணிலும் இருப்பானா? இதோ இந்த தூணிலும் இருப்பானா?" என தன் மாளிகையின் தூணை காட்டி கேட்டான் இரணியன்

"கொஞ்சமும் தயக்கமின்றி இருப்பான்" என சொன்னான் பிரகலாதன்

அந்த சபை அறிய, எல்லோரும் அறிய உரக்க சொன்னான் இரணியன் "பிரகலதா இத்தோடு என் பொறுமை முடிந்தது, இந்த தூணை உடைப்பேன், உன் நாராயணன் இல்லாவிட்டால் சிங்கம் மானை கொல்வது போல் உன்னை கொல்வேன்"

சொல்லிவிட்டு தூணை நோக்கி சென்றான் இரணியன், அவனின் அந்திம காலம் நெருங்கிற்று

(பிரகலாதன் சொன்ன வார்த்தைகளை கவனியுங்கள் "தூணிலும் துரும்பிலும் இருப்பான் நாராயணன்" ஆம், தூண் என்பது ஒரு கட்டடத்தை தாங்கி நிற்பது, தூண் இல்லா கட்டடம் ஒன்றை காணமுடியுமா? அது சாத்தியமா?

உலகை தூணாக தாங்கி நிற்கின்றான் பரந்தாமன் என அவன் சொன்னது இதுதான்)

தூணை உடைப்பேன் அதில் நாராயணன் இல்லையென்றால் "சிங்கம் போல்" உன்னை கொல்வேன் என இரணியன் பிரகலாதனை மிரட்டியது நாராயணனுக்கு கேட்டது, அவர் முடிவெடுத்தார்

இரணியன் அங்கார உச்சியில் தூணை உடைக்கவும் அந்த அதிசயம் நடந்தது, பேரிரைச்சலில் ஒரு தெய்வீக ஒளி தோன்ற, மாபெரும் அந்த ஒளிசுடரின் நடுவில் இருந்து அந்த மனித உடலும் சிங்க தலையும் கைவிரல் முழுக்க நகங்களுடன் அந்த உருவம் வெளிவந்தது. அதன் கண்களில் அணல் தெறித்தது

சிறிய நரசிம்ம உருவமாக வெளிவந்த அந்த அவதாரம் விஸ்வரூபமெடுத்தது, இரணியனுக்கு சகலமும் விளங்கிற்று

மனித விலங்கு கலவை, கை நிறைய நகம், ஆயுதம் எதுவுமில்லா உருவம் என கண்டவுடனே அவனுக்கு உண்மை விளங்கிற்று, ஆயினும் வாள்வீசினான்

அவன் வாளை ஈக்குச்சியினை தட்டிவிட்டது போல் தட்டிவிட்ட நரசிம்மம் அவனை இழுத்து உயர்த்தி பிடித்து வாசலுக்கு சென்றது,

ஆம், இரணியனுக்கு கிடைத்த வரப்படி அவனை மனிதனும் விலங்கும் கொல்லமுடியாது, பகலிலும் இரவிலும் கொல்லமுடியாது, நிலத்திலும் நீரிலும் அந்தரத்திலும் கொல்லமுடியாது, எந்த வகை ஆயுதத்தாலும் கொல்லமுடியாது, நோயிலும் கொல்லமுடியாது, ரத்தம் சிந்தி அவனை கொல்லமுடியாது, அவன் வீட்டுக்குள்ளும் வெளியிலும் கொல்லமுடியாது

இதனால் மனிதனும் மிருகமும் கலந்த உருவில் இரவும் பகலுமற்ற அந்தி பொழுதில் வீட்டுக்கும் வெளிக்கும் பொதுவான வாசலில், நிலத்துக்கு மேல் தன் தொடையில் வைத்து அவனை ஆயுதமல்லா கரங்களின் கூரிய‌ நகத்தால் கிழித்தெறிந்து ரத்தம் குடித்து கொன்றார்

அந்த மாபெரும் அசுரன் ஒரு விலங்கினை போல செத்து கிடந்தான்

ஆயினும் அந்த நரசிம்ம உருவம் ஆக்ரோஷம் அடங்கவில்லை அது மகா உக்கிரமாக சீறிகொண்டே இருந்தது, எல்லோரும் அருகில் செல்ல அஞ்சினர்

ஆனால் பிரகலாதன் அது நாராயணன் என உறுதியாக நின்றான், அதை நோக்கி மெல்ல சிரித்தான். யாராலும் ஒழிக்க முடியாத இரணியனை ஒழித்தது யாராக இருக்க முடியும்?

நிச்சயம் அந்த தூணில் இருந்து நரசிம்மர் வராவிட்டால் பிரகலாதனை ஒழித்திருப்பான் இரணியன், அவனை காக்க வந்தது யாராக இருக்கும்?

ஆம் நரசிம்மரை கண்டு அஞ்சி எல்லோரும் ஓடி ஒளிய, கொஞ்சமும் பதற்றமின்றி அருகே சென்று அதன் கால்களை கட்டி கொண்டான் பிரகலாதன்

இருவரும் அன்பின் பெருக்கில் பேசினர், அந்த நரசிம்மம் பார்க்க கொடியதாகவும் ரத்தம் பூசிய நிலையில் இருந்தாலும் அதை பகவான் என உணர்ந்து உருக்கமாய் பேசினான் பிரகலாதன்

ஆனாலும் அந்த நரசிம்மத்தின் கோபம் முழுக்க தீரவில்லை, அவர் கோபம் தீரவும் தன் கடமையினை தொடரவும் ஒரு ஆழ்ந்த பூஜை தேவைபட்டது

நரசிம்மமரின் தங்கை அன்னபூரணி அவர் முன் வந்தாள், அவளே ஒரு தீர்த்தம் உருவாக்கி அங்கே சிவலிங்கமும் உருவாக்கி அவரை பூஜை  செய்ய சொன்னாள்

அங்கு பூஜை செய்தார் நரசிம்மர், இரணியன் அசுரன் சந்தேகமில்லை ஆனால் அவன் மாபெரும் பக்தன் பிரம்மாவிடம் வரம் எற்ற பக்தன் என்பதால் அவருக்கு தோஷம் ஏற்பட்டது

அந்த தோஷத்தை போக்கி தன் ஆவேசத்தை போக்கி இங்கு தன் அவதாரம் முடித்து அமைதியாக தன் இடம் சென்றார்

அவர் பாவம் போக்கிய தலமே அங்க மங்கலம், அன்னை உருவாக்கிய சிவலிங்கமே நரசிங்க நாதர்

இந்த ஆலயம் கிரியா தலம், அதாவது இந்த லிங்கம் கிரியா லிங்கம் என அழைக்கபடுகின்றது, அதாவது படைப்பு தத்துவம்

இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியா சக்தி என அடிப்படை சக்திகள் மூன்று, இந்த கிரியா சக்தி என்பது படைப்பு சக்தி தன் கர்மாவினை செய்யவைக்கும் சக்தி, ஒருவன் தன் கர்மாவினை முழுக்க உணர்ந்து அதை ஏற்றுகொண்டு திறம்பட செய்யும் சக்தி

பிரம்மா படைப்பின் கடவுள், அவர் இரணியனுக்கு வெட்டியாக அல்லது அநீதியாக வரம் அருளவில்லை, அவன் தன் கர்மாவினை சரியாக செய்யட்டும் நல்ல விஷயங்களை படைக்கட்டும் என்றே வரம்ருளினார்

ஆனால் அவன் அந்த வரத்தை சரியாக பயன்படுத்தாமல் சென்றபோது அழிவு  வந்தது, பகவானே அவனே அழித்துபோட்டார்

அவனை அழித்த நரசிம்மம் தன் இயல்புபடி ஆவேசத்தோடு ஆடியபோது இந்த கிரியா லிங்கமே அதற்கு சாந்தி கொடுத்தது

நரசிம்மம் தன் கர்மத்தை சரியாக செய்தது எனும் அந்த சாந்தத்தை கொடுத்து நிம்மதியும் கொடுத்தது

இந்த ஆலயம் இது, கேரளாவின் கடுக்கரை கோவில் மகாபலிக்கு என்றால் இரணியன் வதை நடந்ததை சொல்லும் ஆலயம்  இது

இங்கு சிவன் நரசிங்க நாதராக மேற்கு நோக்கி வீற்றிருக்கின்றார், அன்னை ஆவுடை நாயகியாக கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கின்றாள்

இந்த ஆலயத்தின் அருகே நரசிம்ம அவதாரமெடுத்த விஷ்ணு நரசிம்ம சாஸ்தா ஆலயமாக தனித்து அமர்ந்திருக்கின்றார்

இந்த ஆலயம் நரசிம்ம நாதர் ஆலயம் , நரசிம்மர் வழிபட்ட சிவாலயம் என தனித்து நிற்கின்றது

இது காசி சிவாலயம் போல பல சம்பிரதாயங்களை கொண்டது, நரசிம்ம ஜெயந்தி அன்று காசி ஆலயம் சிறப்பிக்கபடுவது போல இங்கும் பல சிறப்பு வழிபாடுகள் உண்டு

இந்த ஆலயம் நாகன் எனும் தசவாயுவுடன்  தொடர்புடையது, எது உடலுக்கு ஆபத்தோ அதை வெளியே தள்ளுவது அல்லது உள்ளூர அழித்துபோடுவது இந்த வாயுவின் செயல்

இங்கு வழிபட்டால் உடலிலும் மனதிலும் ஆகாதன ஒவ்வாதன எல்லாம் அகலும், ஆபத்தான விஷயமெல்லாம் வெளியேற்பட்டு உடலும் மனமும் சீராகும்

நாடிகளில் இது கூர்ம நாடி சம்பந்தமானது

இந்த தலத்தின் தாத்பரியம் மிக மிக ஆழமானது, நுணுக்கமானது

அதாவது ஒவ்வொரு மனிதன் மனமும் தெய்வநிலையும் மிருகநிலையும் கலந்தது, மானிட மனம் இப்படி விலங்கு நிலைக்கும் தெய்வநிலைக்கும் இடையே போராடும் குணம் கொண்டது

அம்மனம் விலங்கு நிலைக்கு சென்றால் அவன் பெரும் பாவியாகின்றான், தெய்வ நிலைக்கு சென்றால் அவன் யோகியாகின்றான் முக்தி நோக்கி செல்கின்றான்

இந்த ஆலயம் ஒருவனின் மிருக குணத்தை அழித்து அவனுக்குள் இருக்கும் தெய்வநிலையினை உயர்த்தி தரும் ஆலயமிது

ஒருவன் தன் கர்மத்தை நல்லதாக செய்தல் அவசியம், தெய்வத்தை நோக்கி செல்லும்படி புண்ணிய கர்மாவாக செய்தல் அவசியம்

அந்த வரத்தை தரும் அற்புதமான ஆலயம் இது, இங்கு வழிபட்டால் மனதின் மிருக நிலை அகலும் தீய எண்ணம் மாய ஆசைகள் அகலும், மனம் தெய்வத்தை நோக்கி மேலானதை தேடும்

அந்நிலையில் ஒருவன் செய்வதெல்லாம் நல்ல கர்மாவாக அமையும், அதை தரும் அற்புதமான ஆலயம் இது

இந்த ஆலயத்தில் வழிபட்டால் அங்கம் நலமாகும் வாழ்வு மங்கலமாகும், அதனாலே இது அங்க மங்கலமாயிற்று

கிரியா என்றால் உயிர்சக்தி, ஆதார சக்தி. அந்த சக்தியினை இந்த ஆலயம் மேம்படுத்தி  தரும், நலல்ன எல்லாம் தரும்

இந்த சிவன் நல்ல கர்மாவினை செய்ய கெட்டதை அழித்து தருவார், அந்த நரசிம்ம சாஸ்தா எல்லா வகை அருளையும் தருவார், நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் , நல்ல கர்மா நல்ல சிந்தனையுடன் வந்து சேரும் எல்லோருக்கும் வழிகாட்டும், எல்லோருக்கும் பயனடையும் வெகு உயர்ந்த வாழ்வினை வாழ்ந்து தெய்வமாய் வழிகாட்டி நிற்பீர்கள் இது சத்தியம்

Comments

Popular posts from this blog

Temple info -1830. Perunna Subramanya Swamy Temple, Kottayam. பெருந்நா சுப்ரமண்ய ஸ்வாமி கோயில், கோட்டயம்

Temple info -2619 Udayanapuram Subramanya Swamy Temple,Vaikom,Ernakulam. உதயானபுரம் சுப்ரமண்யஸ்வாமி கோயில்,வைக்கோம்,எர்ணாகுளம்

Birla Mandir Hyderabad பிர்லா மந்திர்,ஹைதராபாத்