Temple info -2976. Meikandeeswarar Temple, Kayalpattinam

 தச வீரட்டானம் 09 :  மெய்கண்டேஸ்வரர் திருக்கோயில் காயல்பட்டினம்


தசவீரட்டானம் தலங்களில் ஒன்பதாம் தலம் இந்த காயல்பட்டினம் மெய்கண்டேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் பற்றி அறியுமுன் காயல்பட்டணம் பற்றி அறிதல் அவசியம்.


தாமிரபரணி இப்போது ஓடிக்கொண்டிருப்பது போல் அன்று ஓடவில்லை. அது முற்காலத்தில் அது கொற்கையினை ஒட்டி ஓடி கடலில்  கலந்தது. பின்னாளைய கடல்கோள் மாறுபாட்டால் அதன் நீரோட்டம் மாறிவிட்டது.


தொடக்கத்தில் அது காயல்பட்டணம் அருகேதான் கடலில் கலந்தது. அப்போதுதான் அகத்திய முனிவர் இந்த ஆலயத்தை ஸ்தாபித்தார். மெய்கண்டேஸ்வரராக ஸ்தாபித்தார்.


தாமிரபரணியின் தொடக்கம் பாபநாசத்தில் இருந்து அதன் முடிவு வரை அகத்தியர் பெரும் சிவாலயங்களை நிறுவினார். தாமிரபரணியின் மகத்தான சக்தி அப்படியானது.


அப்படி கடைசியாக அமைக்கப்பட்டதுதான் இந்த மெய்கண்டேஸ்வரர் ஆலயம்.


காயல்பட்டணம் என்பது குலசேகர பட்டணம் வீரபாண்டியன் பட்டணம் போன்ற பாண்டியர் கால நகரங்களின் தொடர்ச்சியாக வந்த வணிகத் துறைமுக பகுதியாக வந்தபோது இந்த லிங்கமும் ஆலயமும் பிரசித்தியானது.


இந்த ஆலயத்தின் வரலாறு துர்வாச முனிவரிடம் இருந்து துவங்குகின்றது. கடுமையான தோல் சரும வியாதியினால் பாதிக்கப்பட்ட முனிவர் தன் பிணி தீர இங்கு வேண்டிக்கொண்டார். அகத்தியரின் ஆலோசனைப் பேரில் வேண்டிக் கொண்டார்


துர்வாசர் முன்கோபி, அடிக்கடி சாபங்களை இடுவது அவர் வழக்கம். அவரின் கர்மவினை கூடி அது அவரின் தவத்தை மீறிப் பிணியாய் வந்தது.


உண்மை எனும் மெய்பொருளை அறியாமல் அவர் அடிக்கடி தானே பெரியவர் எனச் சாபமிட்டதால் இந்நிலை வந்தது. அப்படியான நிலையில்தான் இங்கு அவர் சிவன் அருளில் குணமானார்.


அவரின் மெய் எனும் உடலை குணமாக்கி அப்படியே மெய்பொருளாவது சிவமே, சிவமே எக்காலமும் மெய்பொருள் தன் தவமோ வலிமையோ அல்ல என அவர் உண்மை உணரவைத்ததால் அந்தச் சிவன் மெய்கண்டேஸ்வரர் என்றானார்.


இந்த ஆலயம் முன்பு மிகப் பிரமாண்டமாய் இருந்தது. அதன் சொத்துக்களும் வருமானமும் பாண்டியர் காலத்தில் மிக மிக பெரிதாக இருந்தது.


பாண்டிய மன்னர்கள் இந்த ஆலயத்தை மிக மிக பெரிதாகக் கொண்டாடினார்கள். மூன்று பிரகாரம் கொண்டு திருசெந்தூர் கோவில் போல் அது பெரிதாக இயங்கிற்று.


தாமிரபரணி திசை மாறிச் சென்றாலும் அதன் கிளை இப்பக்கம் வந்தது. அதன் பின்னும் இந்த நகரமும் ஆலயமும் கொண்டாடபட்டேதான் இருந்தது.


13 ஆம் நூற்றாண்டில் மதுரையில் பாண்டிய வம்சம் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் தலைமையில் வலுவாக இருந்தவரை இந்த ஆலயம் சீரும் சிறப்புமாக இருந்தது.


மதுரையில் ஆப்கானிய சுல்தான்கள் ஆளும் போது இந்த பிரதேசமெல்லாம் அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தபோது முதல் சோதனை தொடங்கிற்று.


சுல்தான்களின் 40 ஆண்டுகால ஆட்சியில் பெரிய அழிவுகளும் மாற்றுமத குடியேற்றங்களும் இப்பக்கம் வந்தன.‌ பின் சுல்தான்கள் நாயக்க அரசுகளால் ஒழிக்கப்பட்டாலும் அவர்களிடம் கடல்படை இல்லை என்பதால் இந்த பக்கம் மாற்றுமத ஆதிக்கம் நீடித்தது.


பின் 16 ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர், டச்சுக்காரர் என வந்து பெரும் ஆக்கிரமிப்பு அழிவுகளைச் செய்தார்கள். திருசெந்தூர் ஆலயமே அப்போது பாழ் அடைந்து கிடந்தது.


அப்படியான காலக்கட்டங்களில் இந்த காயல்பட்டண மெய்கண்டேஸ்வரர் ஆலயமும் அழிய ஆரம்பித்தது.


40 ஏக்கர் கோவில், அதனைச் சுற்றி 200 ஏக்கர் நிலம் இன்னும் அதன் எதிரே ஒரு பெருமாள் கோவில் இடையில் அக்ரஹாரம் என பிரமாண்டமாக இருந்த இந்த ஆலயம் பின் மாற்றுமத காலத்தில் சிக்கி சீரழிந்து அடையாளமே இல்லாமல் போயிற்று.


சில ஆண்டுகளுக்கு முன்புதான் சில பக்தர்கள் ஒன்று கூடி அதனை ஓரளவு மீட்டு கூரையிட்டு வழிபாடுகளைத் துவக்கினார்கள். அதுவும் அவ்வப்போது நடக்கின்றது.


இப்போதைக்கு ஆலயம் அழியாமல் மீட்டெடுக்கப்பட்டிருக்கின்றதே அன்றி முழுமையான வரலாறும் வரவில்லை, பூஜைகளுக்கும் பெரிதாக வழியில்லை. அறநிலையத்துறை ஒருகால பூஜைக்குக் கூட இங்கு ஒத்துழைக்கவில்லை.


ஆனால், இந்தச் சிவன் சக்தியுள்ளவர். கேட்ட வரத்தை கொடுப்பவர் என்பதால் மெல்ல மெல்ல அவரின் புகழ் பரவி பக்தர்களின் ஒத்துழைப்பால் இன்று அழியாமல் காக்கப்படுகின்றது.


இந்த ஆலயம் துலங்கிவிடாதபடி மர்ம சக்திகளின் நடவடிக்கைகளும் உண்டு. அதைத் தாண்டி ஆலயம் எழுகின்றது.


இது மிகப் புராதனமான ஆலயம். அகழ்வாராய்ச்சி தொல்லியல் துறையெல்லாம் ஆங்காங்கே அப்பக்கம் ஆய்வு செய்யும் போது இப்பக்கமும் வருவார்கள். இங்கே பிரமாண்ட ஆலயம் இருந்தது என்பதோடு முடித்தும் கொள்வார்கள்.


இந்த ஆலயம் எப்படியெல்லாம் திசைமாற்றப்பட்டது என்றால் அந்த ஆலய தேவியின் நிலையே சாட்சி.


இந்த ஆலயத்தின் நாதர் மெய்கண்டேஸ்வரர், அன்னை மெய்ஞானவல்லி.


அவள் முத்தாரம்மன் போல அப்பக்கம் முன்பு விசேஷம். அவள் பெயரில் மெஞ்ஞானபுரம் எனும் ஊர்களெல்லாம் இருந்தன. இன்று அவை முழு கிறிஸ்தவ ஊராக மாற்றப்பட்டிருக்கின்றது.


இந்த அன்னையின் சிலை கூட அந்த ஆலயத்தில் இல்லை. அவள் பெயரின் அடையாளமோ வேளாங்கண்ணி போல் திசைமாற்றப்பட்டுவிட்டது.


சுமார் 400 வருடங்கள் கிழக்கு கடற்கரைகள் அந்நியர்வசம் சிக்கிய சீரழிவின் சாட்சிகள் இவை.


இதையெல்லாம் மீறி இந்த ஆலயம் துலங்கி நிற்பதும் தன்னை அழிந்த நிலையில் இருந்து மீட்டெடுத்திருப்பதும் சிவனின் அருள்.


இந்தப் பகுதியில் தாமிரபரணி திசைமாறியதும் அருகில் இருக்கும் ஆத்தூரில் இதே ஆலயப் பிரதி ஒன்று அக்காலத்தில் உருவானது. அது சோமநாதர் ஆலயம்.


இந்தத் தத்துவம் ஆழமானது.


பொதுவாக கடற்கரையோர சிவாலயங்கள் சோமநாதர் பெயரைத் தாங்கி நிற்கும், அது சந்திரன் ஆதிக்கம் கொண்டிருக்கும்.


சந்திரன் மனம் சம்பந்தபட்ட கிரஹம், சோமசுந்தரர் சோமநாதர் என்பதெல்லாம் சந்திரனுடன் கூடிய சிவதலங்கள். அங்கு வழிபட்டால் மன அமைதி கிடைக்கும், மன சிக்கல்கள் தீரும், மனோபலமும் நலமும் அதிகரிக்கும்.


கடற்கரையோர சிவாலயங்களின் தத்துவம் இது. சோமநாதர் என எழுந்திருக்கும் சிவனின் தனித்துவம் இது.


இங்கு மனம் சம்பந்தமான எல்லா சிக்கலும் தீரும். சந்திரனால் உள்ள ஜாதக குறைகள் சரியாகும்.


இங்கு துர்வாசமுனி சருமநோய் தீர்ந்தது என்பதும் கடற்கரை மருத்துவம். கடலோரம் எப்போதும் உப்புக்காற்று வீசும். அந்தக் காற்று சருமநோய்களை அகற்றும். இந்த ஆலயத்தில் அந்த அற்புதம் சிவனருளால் கூடுதலாக நடக்கின்றது.


இந்தத் தலம் சம்பத் தலம் எனக் கொண்டாடப்படும். சம்பத் என்றால் வளமை, செல்வாக்கு, பெருவாழ்வு, செல்வம், அறிவு என எல்லாம் கலந்த பெரும் நிலை.


இந்த மெய்கண்டேஸ்வரர் அதனை அருள்வார். இது தசவாயுவில் வியானன் சம்பந்தமான பிரச்சினைகளைத் தீர்க்கும். தொடு உணர்வு ஸ்பரிசம் என எல்லாமும் கட்டுபடுத்துவது இந்த வாயுதான்.


நாடிகளில் இது சங்கினி நாடியினை ஸ்திரப்படுத்தும்.


இந்த ஆலயம் சக்தி வாய்ந்தது. சுமார் 700 ஆண்டுகள் போராட்டத்திலும் மீண்டு எழுந்து தன்னை நிறுத்திக் கொண்ட ஆலயம். ஒருமுறை வழிபட்டால் மீண்டும் மீண்டும் உங்களை இழுக்கும் ஆலயம்.


இங்கு ஒரு சித்தர் வலுவாக உண்டு அவர் துர்வாசமுனியா அகத்தியர் வழியா என்பது இன்னும் அறியபடவில்லை அந்த சித்தர்தான் அவரின் சூட்சும காவல்தான் இக்கோவில் முழுக்க அழியாமல் நிற்கின்றது


இன்று அது துலங்கி நிற்க அந்த சித்தர்தான் காரணம், அந்த சித்தர் ஆறு அடி நாகமாக அங்கு உண்டு, இப்போதும் சிவனை வழிபட்டு செல்லும் நாகமாக அங்கு உண்டு


அந்த சித்தரின் அருளும் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்


மேற்கு நோக்கி வீற்றிருக்கும் இந்தச் சிவனே துர்வாசரின் கர்மவினை மட்டுமல்ல தன்னை நாடிவரும் ஒவ்வொருவர் கர்மவினையும் அகற்றுகின்றார். நல்வாழ்வு தருகின்றார்.


இந்த ஆலயம் வழிபாட்டு நேரம் தவிர இதர நேரம் பூட்டியிருக்கும். இதனால் இந்த ஆலயத்தை தரிசிக்க விரும்புவோர் ரமேஷ் ஐயர் என்பவரை 9442306662 எனும் எண்ணில், முத்து செல்வம் என்பவரை 9843999869 எனும் எண்ணில் தொடர்பு கொண்டுவிட்டு சென்றால் எளிதில் தரிசிக்கலாம்.


திருசெந்தூர் செல்லும் போது, குலசேகரபட்டணம் பக்கம் செல்லும் போது இந்த மெய்கண்டேஸ்வரரை தரிசிக்க மறவாதீர்கள்.


தச வீரட்டானம் ஆலயங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு போராட்டத்தில் மனதிற்கும் உடலுக்கும் வெற்றியினைத் தருபவை, நலம் தருபவை. நிம்மதியும் தெளிவும் தருபவை.


இந்த ஆலயம் சருமம் சம்பந்தபட்ட மேனி சம்பந்தபட்ட சிக்கல்களை உடலாலும், மனம் சம்பந்தபட்ட சிக்கல்களை சூட்சுமமாகவும் தீர்க்கும் சக்தி கொண்டது. வேண்டிய வரத்தை தரக் கூடிய சக்திமிக்க தலம்.


ஒருமுறை இந்த மெய்கண்டேஸ்வரரை தரிசித்துப் பாருங்கள். அவரே உங்களை மீட்டெடுத்து தன் ஆலயத்தின் வழமையான பக்தர்களாக சாட்சிகளாக மாற்றிக்கொள்வார். இது சத்தியம்.

Comments

Popular posts from this blog

Temple info -1830. Perunna Subramanya Swamy Temple, Kottayam. பெருந்நா சுப்ரமண்ய ஸ்வாமி கோயில், கோட்டயம்

Temple info -2619 Udayanapuram Subramanya Swamy Temple,Vaikom,Ernakulam. உதயானபுரம் சுப்ரமண்யஸ்வாமி கோயில்,வைக்கோம்,எர்ணாகுளம்

Birla Mandir Hyderabad பிர்லா மந்திர்,ஹைதராபாத்