Temple info -3366. Kamakshi Ambal temple,Madavalam, Kanchipuram. காமாட்சி அம்பாள் கோயில்,மடவாளம்,காஞ்சிபுரம்
Temple info -3366
கோயில் தகவல் -3366
ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயம்,மடவாளம்
காஞ்சிபுரம் வந்தவாசி சாலையின் நடுவில் உள்ள உக்கலில் (மடாவளம்) எழுந்தருளி அருள் பாவித்து வரும் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயத்தில் சந்திரனைத் தலையில்( மூன்றாம் பிறைச்சந்திரன்) சூடிய சந்திர மௌலீஸ்வரர் சன்னதியும், ஸ்ரீ ஜெகத்குரு ஸ்ரீ ஆதிசங்கரர் சன்னதியும், தொழில் வளர்ச்சிக்கு அருள் வழங்கும் பைரவர் சன்னதியும், உடல்நலனைப் பேணிக்காக்கும் தன்வந்திரி சன்னதியும், அருள்மிகு கணபதி, முருகர், சன்னதியும் அமைந்துள்ளது.
72 அடிகொண்ட கிழக்கு ராஜ கோபுரம், 73 அடிகொண்ட வடக்கு ராஜகோபுரம் அமையப்பெற்று உள்ளே பிரகாரம், வெளிப்பிரகாரம் நடுவில் மண்டபம் அமையப் பெற்றது மிகப் பெரிய சிறப்பாகும், வெளியே கருங்கற்களால் கட்டப்பட்ட மதில் சுவரும் அமையப் பெற்று ஆலயம் அழகாகக் காட்சித் தருகின்றது. கோபுரங்கள் மேல் தெரியும் வண்ண விளக்குகளின் அற்புதக் காட்சிக் கண்ணைப் பறிப்பதாகும், காண்பவரைக் கவர்வதாகும்.
தெய்வங்கள்
ஸ்ரீ காமாட்சி அம்பாள்
ஸ்ரீ காமாட்சியம்மாள் இந்த ஆலயத்தில் அமர்ந்து அருளாட்சி செய்து பக்தர்களைப் பரவச மூட்டுகிறாள். அன்னையின் திருமுகப் பொலிவு கண் கொள்ளாக்காட்சியாகும். அன்னையின் திருநெற்றியிலே மாதந் தோறும் வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவுக்காட்சித் தோன்றுவது அதி அற்புதம்! பேரழகு, உலக அதிசயம்!
ஸ்ரீ சந்திர மௌலீஸ்வரர்
'பித்தா பிறை சூடிபெருமானே!' என்று சிவபெருமானைச் சுந்தரர் சுந்தரத் தமிழிலே பாடியுள்ளார், அந்தப் பிறைச்சந்திரனை (மூன்றாம் பிறையைச் ) சிவபெருமான் தலையிலே சூடிய காரணத்தால் சந்திரமௌலீஸ்வரர் ஆனார். அவர் இந்தத் திருக் கோயிலில் அமர்ந்து பக்தர்களுக்கு நாள்தோறும் அருள் வழங்கிக் கொண்டிருப்பது மிகப்பெரிய சிறப்பாகும்.
ஸ்ரீ ஆதிசங்கரர்
மலையாளதேசமான கேரளாவில் காலடிப் பேட்டையில் அவதாரம் செய்தவர். உலகத்தில் ஆன்மிகப் பயிரை வளர்த்தவர். அன்பு, அமைதியை உருவாக்கிய பெரியமகான். அதனால் தானே ஜெகத்குருவானார். அவரின் திருவுருவம் இந்தத் திருக்கோயிலில் இருப்பது மிகப் பெரிய புண்ணியமாகும்.
ஸ்ரீ யோக ஞான கணபதி
வாழ்வில் மிகப்பெரிய வளமும், அறிவும், ஞானமும் பெற ஞானகணபதியின் அருள் நமக்கு வேண்டும். அந்த அறிவு, ஞானம், அழகு, வீரம், வளம் அனைத்தையும் வாரி வழங்கும் ஸ்ரீயோக கணபதியும் இந்தத் திருக் கோயிலில் இருப்பது மிகப் பெரிய சிறப்பாகும்.
ஸ்ரீ சுப்பிரமணியர்
"சுக்குக்கு மிஞ்சிய கஷாயம் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை" இது பக்தர்கள் சொல்லும் பழமொழி. இந்த ஆலயத்தின் உள்ளே சுப்பிரமணியரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கிவருவது மிகப்பெரிய பேறாகும்! உலகை நொடியில் வலம் வந்தார். அவரை நாம் பக்தியுடன் வலம் வந்தால் நம் வாழ்வில் வளம் வரும் என்பது பக்தர்கள் கண்ட உண்மையாகும்.
ஸ்ரீ மகாலட்சுமி
இந்த ஆலயத்தின் உள்ளே ஸ்ரீ மகாலட்சுமித்தாயும் அமர்ந்து பக்தர்களுக்கு வேண்டிய செல்வ வளங்களை நாள் தோறும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார். பொருள் (செல்வம்) இல்லாதவனை இந்த உலகம் மதிக்கப் பொருள் வேண்டும். இந்த ஆலையத்திற்கு வந்தவர்கள் பொருளோடு அருளும் பெற்று வளமாக வாழ்கிறார்கள்.
ஸ்ரீ தன்வந்திரி
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்"- அந்த வாழ்வே சிறந்த வாழ்வாகும். இங்கே மருத்துவராக அமர்ந்து பக்தர்களின் எந்த நோய்க்கும் மருந்து தந்து நல்ல ஆரோக்கியமான வாழ்வை தருகின்றார். அந்தத் தன்வந்திரி சன்னதியும் இங்கே அமைந்திருப்பது மிகப்பெரிய புண்ணியமாகும்.
ஸ்ரீ பைரவர்
தேய்பிறை அஷ்டமியில் ஸ்ரீபைரவரை வணங்கி வழிபட்டால் தொழில் வளம் மேலும் மேலும் பெருகும் என்பது பக்தர்களின் மிகப் பெரிய நம்பிக்கை . அந்த வளத்தையும் வழங்க இந்த ஆலயத்தில் ஸ்ரீ பைரவர் அமர்ந்திருப்பது மிகப்பெரிய புண்ணியமாகும்.









Comments
Post a Comment