Temple info -2979. Agneeswarar Temple, Rajavallipuram

 



தச வீரட்டானத் தலங்கள் 06 : ராஜவல்லிபுரம் அக்னீஸ்வரர் ஆலயம்.


நெல்லை  அருகே அமைந்த சிவதலங்களில் முக்கியமானது செப்பறை அழகிய கூத்தர் ஆலயம்.  தாமிர சபை என அழைக்கபடும் சிறப்பு பெற்றது அந்த நடராஜர் தலம். இது இராஜவல்லிபுரம் எனும் ஊரில் அமைந்திருக்கின்றது,


 இந்த ஊரில்தான் தசவீரட்டனத்தின்  ஆறாம் ஆலயம் அமைந்துள்ளது.


இதுதான் அந்த ஊரின் முதல் ஆலயம், காலத்தால் மூத்தது இதுதான்.


இந்த ஆலயத்தின் வரலாறு அக்னி பகவானிடம் இருந்து தொடங்குகின்றது. இந்த அக்னி பகவான் அஷ்டதிக் பாலகர்கள் எனும் எண் திசை காவலர்களில் ஒருவர்.


எட்டு திசைக்கும் எட்டு காவலர்கள் சிவனால் நிறுத்தபட்டார்கள். இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன்.


எட்டு திசைகளில் தென்கிழக்கு திசைக்கு உரியவர் அக்னி பகவான். இவர்தான் யாக வேள்விகளிலும் இன்னும் பல வழிபாடுகளிலும் பிரதானம், தீபத்தின் சுடர் முதல் எல்லாம் அவர்தான்.


யாகத்தில் இடப்படும் பொருட்களைத் தெய்வங்களிடம் சேர்ப்பதும் இவர்தான். தேவர்களில் மகா முக்கியமானவர் இவர். எல்லா வழிபாடுகளின் அடிப்படை அவருடையது.


இந்த அக்னிபகவானுக்கு சிவனின் நாட்டிய கோலத்தை காணும் ஆவல் வந்தது. அப்படியே சிவனுடன் எப்போதும் கலந்திருக்கும் பெரும் விருப்பமும் இருந்தது.


அப்படியே எட்டு மூர்த்திகளில் ஒன்றாகிவிடும் விருப்பமும் இருந்தது. எட்டு மூர்த்தி என்றால் ஆகாயம், சூரியன், வாயு, காற்று, நிலா, நீர், நிலம், நெருப்பு என எட்டு, இவை எல்லாமே சிவ வடிவம்


இப்படியான அக்னி பகவான் சிவனை நோக்கி இந்த வரத்துக்காகப் பெரும் தவம் இயற்றினார். அவர் தவம் செய்த இடம் கங்கை கொண்டான் எனும் ஊர் அருகே இருந்தது. கங்கை கொண்டான் என்பது சிவபெருமானைக் குறிக்கும் பெயர்.


இது சிற்றாறின் கரையில் அமைந்துள்ளது. இந்த நதி குற்றாலத்தில் இருந்து உருவாகி வந்து தாமிரபரணியில் கலக்கும் நதி, இதன் கரையில் காமதேனு தீர்த்தத் துறையில் தவமிருந்தார் அக்னி பகவான்.


சிவன் அவர் தவத்துக்கு இறங்கி அவருக்குக் கட்டளையிட்டார். அங்கிருந்து நகர்ந்து தாருகாவனமும் சிங்சா வனமும் சந்திக்கும் இடத்துக்கு வரச் சொன்னார்.


அப்படி அவர் செல்லும் போது ஒரு இடத்தில் தங்கினார். அப்போது சிவபூஜை செய்ய விரும்பி மண்ணில் ஒரு லிங்கம் செய்து வழிபட்டார், அதற்காக ஒரு தீர்த்தமும் உருவாக்கினார்.


இந்த லிங்கம் அக்னீஸ்வரர் என்றானார், அந்த தீர்த்தம் அக்னி தீர்த்தம் என அமைந்தது.


இங்கு அவர் மனமார வழிபட்டு சிவனுக்காக ஏங்கி நின்றபோதுதான் சிவன் அவருக்கு நடராஜ கோலம் காட்டினார். அப்படியே தன் நெற்றிக்கண்ணிலும் தன் எட்டு மூர்த்தங்களிலும் ஒன்றாக அக்னி பகவானை ஏற்றும் கொண்டார். அன்று பங்குனி மாதம் மிருகசீரிஷ நட்சத்திரமாய் இருந்த நாள்.


ஆம். அக்னி சிவனோடு முழுக்க கலந்த தலம் இது.


இந்த ஊர் இராஜவல்லிபுரம் என்றாயிற்று. அந்தச் சிவன் அருளிய நடராஜர் கோலக் காட்சி செப்பறை அழகிய கூத்தர் ஆலயமாயிற்று. மூல காரணமான இந்த ஆலயம் அக்னீஸ்வரர் ஆலயம் என்றாயிற்று.


அக்னி மூலை தென்கிழக்கு என்பதால் இந்த ஆலயம் ஊரின் தென்கிழக்கில் அமைந்துள்ளது.


சிவாலயங்கள் மூவகை ஆகம விதிப்படி அமைந்திருக்கும். அவ்வகையில் இது சுதந்திரா ஆகம விதி ஆலயம், அதாவது அம்பாளுக்கும் சிவனுக்கும் தனித் தனி கொடிமரம் அமைந்திருக்கும்.


இங்கு அன்னையின் பெயர் அகிலாண்ட ஈஸ்வரி.


இந்த ஆலயம் மேற்கு நோக்கி அமைந்த ஆலயம், அதாவது அக்னி பகவான் தன் கர்மவினை தீர்ந்து சிவனோடு கலக்க வழிபட்ட ஆலயம், அதனால் மேற்கு நோக்கி இந்த லிங்கத்தை ஸ்தாபித்து வழிபட்டார்.


இந்த ஆலயம் சிவஞான சுவாமிகள் திருவாவடுதுறை சுவாமிகளால் பெரும் பெயர் பெற்றது, அவரின் வரலாற்றில் அழியா இடம் கொண்டது.


நெல்லையின் மேற்கே பாபநாசம் அருகே விக்ரமசிங்கபுரத்தில் அழகிய கூத்தர் என்றொரு  கல்விமான் இருந்தார். இவருக்கு குழந்தை பாக்கியமில்லை. அவர் அகத்திய மாமுனிவரிடம் வேண்டினார்.


அழகிய கூத்தர் என்பது இந்த இராஜவல்லிபுரத்தில் இருக்கும் நடராஜரின் பெயர்.


அகத்தியர் அருளால் அவருக்கு ஒரு ஆண்மகவு பிறந்தது. அதற்கு ஐந்து வயதாகும் போது பாடம் கற்பதற்காகத் திண்ணைப் பள்ளி குருவிடம் சேர்த்துவிட்டார் அழகிய கூத்தர்.


இயல்பிலே மிகக் கூரிய அறிவுள்ள அக்குழந்தை மிக அற்புதமாகப் பதிகங்களைப் பாடியது. அந்நேரம் பாபநாசம் உள்ளிட்ட இடங்களுக்கு யாத்திரை வந்த திருவாவடுதுறை ஆதீன துறவிகள் இக்குழந்தை சாதாரணம் அல்ல என்பதை உணர்ந்து அதன் பெற்றோரைத் தேடினார்கள்.


அக்குழந்தை தெய்வீகக் குழந்தை என்பதால் தங்களோடு கூட்டிச் செல்ல விரும்பினார்கள். குழந்தையும் தயக்கமின்றி பின் செல்லத் தயாரானது. பின் பத்து வயதுக்குப் பின் அனுப்பலாம் என முடிவாயிற்று.


எல்லாம் அகத்திய முனிவரின் அருள் என்பதால் அழகிய கூத்தரும் ஒப்புக் கொண்டார்.


பத்தாம் வயதில் வேலப்ப தேசிகரிடம் அக்குழந்தை ஒப்படைக்கப்பட்டது. பின், அவரின் வாரிசாகச் சிவஞான சுவாமிகள் என அந்த திருவாவடுதுறை ஆதீனமுமானது.


ஆம். சிவஞான சுவாமிகள் எனும் சிவாச்சாரிய மடாதிபதி இப்படித்தான் உருவானார். இது சுமார் 400 வருடத்துக்கு முந்தைய நிகழ்வு.


சைவ வரலாற்றில் அவர் ஓர் அதிசயம். சுமார் 29 நூல்களை அவர் எழுதித் தந்தார். அத்தனையும் சைவ பொக்கிஷங்கள்.ண


அந்த ஞானகுரு பத்து வயதில் தன் முதல் பதிகத்தை இந்த அக்னீஸ்வரர் அருகிலிருக்கும் அகிலாண்ட அன்னைக்கே பாடினார்.


அதன் பின்பே அத்தனைப் பெரிய இடத்தை அடைந்தார். அவர் வாழ்வில் மங்கா இடம் பிடித்த முக்கிய ஆலயம் இது.


இது முற்காலத்தில் பெரிதாக கொண்டாடப்பட்ட தலம். யுகம் யுகமாகச் சிறப்பிக்கப்பட்டது. சித்தர்களும் மகான்களும் வந்து வழிபட்ட ஆலயம்.


ஆனால், பின்னாளில் அந்தச் செப்பறை நடராஜர் எனும் அழகிய கூத்தர் ஆலயம் பிரதானமானது, இந்த ஆலயம் பின்னடைந்தது.


இவ்வளவுக்கும் இந்த ஆலயமே மூத்த அடித்தள ஆலயம், இந்த ஆலயத்தாலேதான் அந்த அழகிய கூத்தர் ஆலயமே அமைந்தது.


இந்த ஆலயம் கர்மம் தீர்த்து ஒரு ஆத்மாவினைச் சிவனோடு கலக்கச் செய்யும். அக்னி பகவானை சிவன் தன் மூன்றாம் கண்ணாகத் தன் அஷ்ட மூர்த்திகளில் ஒன்றாக இங்கு சேர்த்துக் கொண்டார் என்பது வெறும் நிகழ்வு அல்ல‌.


அது ஜீவாத்மா பரமாத்வோடு இரண்டறக் கலந்தது என்பதும் அப்படி கலந்த நிலையில் நடராஜ கோலம் எனும் மாபெரும் தத்துவத்தை உணர்ந்தது எனும் தாத்பரியம்.


ஆம். இந்த ஆலயம் கர்ம வினைகளை எரித்து முக்தி தரும் ஆலயம். பரமாத்வாவோடு ஜீவாத்மாவினை ஈர்த்து சேர்க்கும் ஆலயம்.


இங்கு அக்னி என்பது ஆத்ம வடிவம், அக்னி சுடர் வடிவம். அந்த ஆலயத்தில் வணங்கும் ஆத்மா இறைவனில் கலக்கும் வரம் பெறும் என்பதே இந்த ஆலயத்தின் தாத்பரியம்.


ஞானேந்திரியங்களில் இந்த ஆலயம் கண் தொடர்புடையது. காட்சிகளினால் வரும் கர்மத்தை இது அழிக்கும். நல்ல கர்மக் காட்சிகளை இறை வடிவ காட்சிகளை இது வழங்கும்.


கண் சம்பந்தமான சிக்கல்களைத் தீர்க்கும் ஆலயம் இதுவே.


தசவாயுக்களில் இது சமானன் எனும் வாயு இதுதான் உடலின் வெப்பநிலையினைக் கட்டுக்குள் வைத்திருக்கும், வெப்பநிலை மாறுபாட்டாலே உடலில் வியாதிகள் வரும், இந்த வாயு சரியாக இருந்தால் உஷ்ணம் சரியாக இருக்கும். நோய்கள் வாரா.


இந்த ஆலயம் அந்த ஆரோக்கியத்தை தரும்.


நாடிகளில் இது காந்தாரி நாடியுடன் தொடர்புடையது. அதனாலே அம்பாள் இங்குச் சக்தி மிகுந்தவளாகின்றாள்.


நெல்லை பக்கம் செல்லும் போது இந்த ஆலயத்தைக் காணத் தவறாதீர்கள். இதே இராஜவல்லிபுரத்தில்தான் செப்பறை அழகிய கூத்தர் ஆலயமும் உண்டு.


அதைத் தரிசிக்கும் முன் இந்த அக்னீஸ்வரரை தரிசியுங்கள். உங்கள் கர்ம வினை முழுக்க அகலும். சிவன் உங்களைச் சேர்த்துக் கொள்வார். அந்த ஆனந்தத்தில் அழகிய கூத்தர் நடராஜரைத் தரிசியுங்கள். அந்த நடனமும் அதன் தாத்பரியமும் முழுக்க முழுக்க முழு ஆனந்தமாக உங்களுக்குப் புரியும்.


உங்கள் ஆத்மா அங்கே பெரும் பரவசத்துடன் பிறவி எடுத்த பலனை முழுக்க நிறைவு செய்யும். எஞ்சிய வாழ்வு மிக எளிதாக நிம்மதியான இதற்கு மேல் என்ன உண்டு எனும்படி நிறைவாக செல்லும். வாழ்வு முழுமை அடையும். அதன் பின் பிறப்பில்லை. இது சத்தியம்.

Comments